அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கோ | திரை விமர்சனம் |

Go down

கோ | திரை விமர்சனம் | Empty கோ | திரை விமர்சனம் |

Post by VeNgAi Mon May 02, 2011 4:33 pm

ஒரு சாதரண பத்திரிகை புகைப்படக்காரர் தலையில் நாட்டை யார் ஆள வேண்டும் என்ற பொறுப்பு வந்தால் என்ன செய்வான் என்பதுதான் இந்த படத்தின் கதை.

கே.வி.ஆனந்த்-சுபா கூட்டணியில் வெளியாகி இருக்கும் மூன்றாவது படம் தான் 'கோ'. 'கனா கண்டேனில்-கந்து வட்டியையும் 'அயனில்-கடத்தல் தொழிலையும் கருவாக எடுத்துக் கொண்ட ஆனந்த் இந்தப் படத்தில் வெகு தைரியமாக தற்கால அரசியலைப் பேசி இருக்கிறார்.

இத்தனை தெளிவான, தீர்க்கமான அரசியல் படம் எதுவும் சமீபத்தில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. படத்தை வாங்கி வெளியிட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் படத்தைத் தேர்தலுக்குப் பின் வெளியிட்டிருப்பதில் கூட சின்னதொரு அரசியல் இருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.தின அஞ்சல் பத்திரிகையின் புகைப்பட நிபுணர் ஜீவா பணியாற்றுகிறார். தைரியசாலி, ஒரு பேங்க் கொள்ளையின் போது திறமையாக செயல்பட்டு நக்சல் கும்பலைக் கைது செய்ய உதவுகிறார். அதே பத்திரிகையில் வேலை பார்க்கிறார்கள் பியாவும், கார்த்திகாவும். பியாவுக்கு ஜீவாவின் மேல் காதல், ஜீவாவுக்கு கார்த்திகா மீது காதல். தேர்தல் நேரத்தில் ஜோசியர் சொன்னார் என்று எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாசராவ் பதிமூன்று வயதுப் பெண்ணைத் திருமணம் செய்வதை ஜீவா அம்பலப்படுத்துகிறார். அதே போல ஆளும் கட்சியின் முதல்வர், நிருபர் ஒருவரை செருப்பால் அடிப்பதையும் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சிறகுகள் என்கிற அமைப்பின் மூலமாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென தேர்தல் களத்தில் குதிக்கிறார் அஜ்மல். நிறைய நல்ல காரியங்கள் மூலம் மக்கள் மனதில் சிறகுகள் இடம்பிடிக்கிறது. இளைஞர்களால் மட்டுமே மாற்றம் கொண்டு வரமுடியும் என்கிற கோஷத்தோடு அஜ்மலின் கட்சி செயல்படத் தொடங்க அவர்களின் பிரசார மேடையில் குண்டு வெடிக்கிறது. சிறகுகளைச் சேர்ந்த முப்பது பேரோடு பியாவும் அந்த குண்டுவெடிப்பில் சாகிறார். ஆனால் பியாவின் மரணம் கொலை என்பதை ஜீவா கண்டுபிடிக்கிறார். தேர்தலில் அனுதாப அலை பெருக அஜ்மல் வெற்றி பெறுகிறார். குண்டு வைத்ததும் பியாவைக் கொன்றதும் யார், அஜ்மலால் அரசியலில் மாற்றம் கொண்டு வர முடிந்ததா என்பதே மீதிக்கதை.

ஜீவாவுக்கு மிக இயல்பாய் பொருந்துகிறது இந்த போட்டோகிராபர் கேரக்டர். சம்பவங்கள் நடக்கும் போது சட்டென்று கேமராவை தூக்கிக் கொண்டு ஒடும் பரபரப்பும், போட்டோ எடுக்கும் லாவகமும் வெகு இயல்பாக வந்திருக்கின்றது. கார்த்திகாவிடம் இவருக்கு இருக்கும் நெருக்கத்திற்கும், பியாவிடம் இருக்கும் நெருக்கத்திற்குமிடையே இவரிடம் தெரியும் அசைவுகள் மிகவும் ரசிக்க வைக்கிறது. கார்த்திகாவின் கண்கள் பல பேரை தூக்கமிழக்க செய்யப்போகிறது. நல்ல அழகான உயரம். ஆனால் நடிப்பதற்கு பெரியதாய் ஏதும் வாய்ப்பில்லை என்றாலும், பியாவின் காதலுக்காக தன் காதலை கட்டுப்படுத்திக்கொள்ளும் காட்சிகளில் ரசனை.

பியா அவுட் ஸ்போக்கன் சென்னைப் பெண். பரபரவென காதலை கொட்டிக் கவிழ்த்து, மடிந்து போகிறார். இவரிடமிருக்கும் துள்ளல் இவர் போனதும் போய்விடுவது குறையாக தெரிகிறது.

சிறிது நேரங்களே வந்தாலும் பிரகாஷ் ராஜ் மற்றும் கோட்டா சீனிவாசராவ் ரெண்டு பேரும் பின்னி பெடலெடுத்து இருக்காங்க. அனுபவம் என்றால் என்ன என்பதை இவங்க ரெண்டு பேர் நடிப்பை பார்த்தால் நிச்சயம் புரியும். மற்றபடி, போஸ் வெங்கட், ஜெகன், சோனா, சிறகுகள்(அஜ்மல்லின் அரசியல் இயக்கம்) நண்பர்கள், தின அஞ்சல் பத்திரிகை அலுவலர்கள் எல்லாரையும் மிக நன்றாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். நிறைய புதுமுகங்கள் சின்ன சின்ன வேடங்கள் என்றாலும் மிக திறம்பட கையாண்டுள்ளார் இயக்குநர்.

'நக நக' பாடலில் ஜெயம்ரவி, சூர்யா, கார்த்தி, ஜீவா என்று நட்சத்திர பட்டாளங்களை ஆடவைத்திருப்பது சுவாரசியம். முக்கியமாய் அதில் கல்யாணராமன் கெட்டப் சிம்பு போல ஒரு கேரக்டரை உலவ விட்டிருப்பதில் ஏதேனும் உள்குத்திருக்குமோ என்று தோன்றுகிறது. படம் யதார்த்தமாக இருப்பதோடு நச்சென்று சில வசனங்களும் இடம்பெற்றிருந்தது. "நமக்கெல்லாம் ஏன் வேண்டாத வேலை, அது தான் நாட்டை திருத்த பஞ்ச் டயலாக் பேசிற ஹீரோஸ் இருக்காங்களே!!! உங்களுக்கெல்லாம் கிரிக்கெட்டும் சினிமாவும் ஹீரோவும், தோணி சிக்ஸ் அடிப்பாரா மாட்டாரா என்பது தான் பிரச்சினை" எனும் இடங்களும் வசனங்களும் அருமை. அரசியல் நக்கல்களுக்கும் பஞ்சமில்லாமல் காட்சிகளும் கலைஞரும் வந்து போகிறார்கள். சோனா பிரசார மேடையில் பேசும் தமிழ் குஷ்புவை நினைவுப்படுத்துகிறது.

கதை திரைக்கதையை எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து எழுதி, இயக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். பரபரவென ஓடும் படத்திற்கு பெரிய பிரச்சினையே திரைக்கதைதான். திடீர் திடீரென வீழ்ந்து விடுகிறது. படம் பார்ப்பவர்களை திசை திருப்ப, எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சர், அஜ்மல் என்று மூன்று பக்கமும் திரைக்கதை ஓடுவதால், ஆங்காங்கே பெரிய அளவில் திரைக்கதை தொய்ந்து வீழ்வதை தவிர்க்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் எடிட்டிங் செய்திருந்தால் இந்த தொய்வைத் தவிர்த்திருக்கலாம்.

ஹாரிஸ் எங்கிருந்து இசையை சுட்டாலும் கேட்க நன்றாக இருக்கிறது, காரணம் பா.விஜய், மதன் கார்க்கியின் அருமையான பாடல் வரிகள்தான்! பாடல்கள் எடுத்த விதம் இன்னும் ஒரு படி மேல ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் பின்னணி இசை மிக வித்தியாசமாக இருந்தது. ஆனால் ஒரு இடத்தில் டைட்டானிக் இசையை நினைவுப்படுத்துகிறது.ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், கே.வி.

ஆனந்தின் கண்ணாக மிக நேர்த்தியாக உழைத்து இருக்கார். இவர் ஏற்கனவே 'அங்காடித் தெரு', 'பாணா காத்தாடி'யில் பணிபுரிந்திருந்தாலும் இந்த படத்தில் இவரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. பீட்டர் ஹெய்னின் சண்டைக்காட்சி உருவாக்கத்தில் இறுதிக்காட்சியில் வரும் சண்டை மிக துல்லியமாக எடுக்கப்பட்டுள்ளது. கலை இயக்குநர் கிரண் நன்றாக செய்துள்ளார். சின்ன சின்ன காட்சிகளுக்கும் டீட்டைலிங் அற்புதம்.

ஒவ்வொரு காட்சியும் படத்தில் அவ்வளவு அழகு. இயக்குநர் கே.வி. ஆனந்திற்கு சிறப்பு வாழ்த்துகள். நிறைய உழைத்து இருப்பார் போல... ஒரு ஜனரஞ்சக படத்தில் இத்தனை உழைப்பு அருமை.

பாடல் காட்சியில் வரும் இடங்கள் எங்கும் பார்த்திராதது. ஆனால் இயக்குநரின் முந்தைய படமான 'அயன்' கூட இதை ஒப்பிடக் கூடாது. அது வேறு களம். இது முற்றிலும் வேறு களம். படத்தில் குறைகளும் சில உண்டு... 'வெண்பனியே' பாடல் துவங்கும் இடம், இரண்டாம் பாதியில் வரும் தொய்வு, சில இடங்களில் வரும் லாஜிக் மீறல்கள், ஆனால் இவை அனைத்தும் மிக சொற்பமான குறைகளே.

நடிகர்கள்: ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல், பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாசராவ், போஸ் வெங்கட், ஜெகன், சோனா. இசை: ஹாரிஸ் ஜெயராஜ்.
இயக்கம்: கே.வி.ஆனந்த்.
தயாரிப்பு: எஸ்.குமார், ஜெயராமன்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum