அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தனியான ஒரு வலயப் பிரதேசமான தீவகத்தையும் கருத்திற்கொள்ள வேண்டு்ம். சி. சிறீதரன்

Go down

தனியான ஒரு வலயப் பிரதேசமான தீவகத்தையும் கருத்திற்கொள்ள வேண்டு்ம். சி. சிறீதரன் Empty தனியான ஒரு வலயப் பிரதேசமான தீவகத்தையும் கருத்திற்கொள்ள வேண்டு்ம். சி. சிறீதரன்

Post by theepan Wed Feb 16, 2011 5:43 am

நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்ற எடுக்கின்ற நடவடிக்கைகளின்போது தனியான ஒரு வலயத்தைக் கொண்ட பிரதேசமான தீவகத்தையும் கருத்திற்கொள்ள வேண்டு்ம். இவ்வாறு பாராளுமன்றில் இடம்பெற்ற இறக்குமதிகள் ஏற்றுமதிகள் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.கெளரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே!

இறக்குமதிகள் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்திலே கலந்துகொண்டு பேசுவதற்கு எனக்கும் வாய்ப்புக் கொடுத்தமைக்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று எமது நாட்டினுடைய தேசிய வருமான அடிப்படையில் தலா வருமானத்திலே பாரியளவு இழப்புக்கள் காணப்படுகின்ற இச்சூழலில் எமது நாட்டினுடைய பல வளங்கள் சுரண்டப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதில் முக்கியமாக 'இல்மனைட்' எனும் கனிய வளமானது யப்பான் நாட்டவர்களால் கொண்டுசெல்லப்படுகின்றது. கடல் வளம் சீனாவிடமும் 'பொஸ்பேட்' கனிய வளம் அமெரிக்காவிடமும் சென்றுவிட்டது.

பெற்றோலியத்தை சீனாவும் இந்தியாவும் சுரண்டுவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற இக்காலகட்டத்தில் நாங்கள் இறக்குமதிகள், ஏற்றுமதிகள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் தொடர்பாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

நாட்டின் வளங்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்ற அதேவேளை எமது நாட்டில் வாழுகின்ற மக்கள் பொருளாதார ரீதியாகப் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுடைய தலா வருமானங்களில் ஒருபுறத்தில் இயற்கை ரீதியாகவும் மறுபுறத்தில் அரசாங்கத்தினுடைய சரியான கொள்கைகள் நிலைநாட்டப்படாத காரணத்தினாலும் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எமது நாட்டில் வாகனங்களை இறக்குமதி செய்கின்ற அளவுக்கும் வாகன நெரிசலின் அளவுக்கும் ஏற்றவிதத்தில் போக்குவரத்துப் பாதைகளோ அல்லது போக்குவரத்துக்கான விரிவாக்கங்களோ மேற்கொள்ளப்படவில்லை என்பதும் அதற்கான மார்க்கங்கள் தேடப்படவில்லை என்பதும் நாங்கள் இன்று நேரடியாகக் காண்கின்ற விடயங்களாகும்.

இன்று யாழ்ப்பாணத்திலுள்ள பல ஊர்கள் கிராமங்கள் பேரூர்கள் என்பன இந்த வகைத் தாக்கங்களைச் சந்தித்திருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமாக யாழ். மாவட்டத்திலுள்ள நெடுந்தீவு என்ற ஒரு பேரூர் பற்றிய மிக முக்கியமான சில விடயங்களை நான் இன்றைய விவாதத்தினூடாக இந்தச் சபையிலே எடுத்துரைக்க விரும்புகின்றேன்.

நெடுந்தீவானது, யாழ்ப்பாணத்திலிருந்து 27 மைல்களுக்கு அப்பால் இந்து சமுத்திரத்தின் மத்தியிலேயுள்ள ஒரு தீவாகும். இது 1963ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட குறிகாட்டுவான் துறைமுகத்திலிருந்து 07 மைல் தூரத்திலுள்ளது.

இத்தீவில் 2002ஆம் ஆண்டு 6322 பேர் வாழ்ந்தனர். அது படிப்படியாகக் குறைந்து 2010 இல் 4792 பேராகியுள்ளது. நெடுந்தீவை அடையவேண்டுமானால் நெடுந்தீவுக்கும் நயினாதீவுக்குமிடையிலுள்ள மலையடி என்னும் கடல் பிரதேசத்தைக் கடந்தே செல்லவேண்டும்.

இப்பிரதேசத்தில் கடலின் அடியி்ல் ஒரு மலையுள்ளதாகக் கூறப்படுகின்றது. இக்கூற்றின் உண்மையை பராக்கிரமபாகு அரசனின் கல்வெட்டு நிரூபணமாக்குகின்றது. அவ்வரசன் காலத்தில் அவ்வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களில் வருடம் ஒன்றுக்கு சுமார் 60 கப்பல்கள் வரை சேதமடைவதாகவும் அதனைத் தடுக்க அவ்ழியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கூடிய வரியை விதித்து அதனை ஒரு கல்வெட்டின்மூலம் பிரகடனப்படுத்தியதை நாம் அறிய முடிகின்றது. இக்கல்வெட்டு இன்றும் நயினாதீவில் அழிந்த நிலையிலுள்ளது. இதிலிருந்து நெடுந்தீவுப் பிரயாணிகள் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கவேண்டியிருந்தது என்பதை நாம் அறியலாம்.

அண்மைய நாட்களில்கூட நெடுந்தீவிலுள்ள மக்கள் போக்குவரத்துக்கான பாதைப் பிரச்சினையினால் திணறுவதை நாங்கள் அவதானிக்க முடிகின்றது. காலஞ்சென்ற கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அல்பிரட் தம்பியையா, வீ.ஏ. கந்தையா, வி.என். நவரத்தினம், கா.பொ. இரத்தினம் ஆகியோரின் தீவிர முயற்சியால் 'இராஜேஸ்வரி' 'அலையரசி' 'குமுதினி' 'வடதாரகை' 'வலம்புரி' 'மணிமேகலை' என்னும் பெயர்களையுடைய மோட்டார் படகுகள் நெடுந்தீவினதும் ஏனைய தீவுகளினதும் போக்குவரத்துச் சேவைகளுக்காகப் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இதனால் ஒருசில காலம் நெடுந்தீவுப் பிரயாணம் திருப்திகரமாகவிருந்தது.

எனினும், அது நீண்டகாலம் நீடிக்கவில்லை. யுத்தம் ஆரம்பமானதும் 'குமுதினி' தவிர்ந்த ஏனைய படகுகள் யாவும் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு காரைதீவுக் கடற்படை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 'குமுதினி' படகு பழுதான நிலையிலிருந்ததால் காரைதீவுக் கடற்படை முகாமுக்கு அனுப்பப்படவில்லை. ஆனால், யுத்தம் முடிந்த பின்னர் இவற்றில் ஒன்றைக்கூட மீளப் பெறமுடியவில்லை.

1985ஆம் ஆண்டில் இதே 'குமுதினி' படகில் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் கடற்படையினரால் வெட்டிச் சாய்க்கப்பட்ட வரலாறும் உண்டு.

இயந்திரங்களை இழந்த நிலையில் இருந்த இந்தப் படகுக்கு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு திருத்த வேலைகள் செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது. இது 52 வயதுடைய ஒரு 'வயதுபோன' படகாகும். அடிக்கடி பழுதடைகின்றபோதிலும்கூட அது ஓடக்கூடிய நிலையில் இருக்கும்போது சேவையிலீடுபடுகின்றது. இது இல்லாவிட்டால் போக்குவரத்துச் சேவையே இல்லை. எனவே கடற்படையினரிடம் இழந்த இப்படகுகளுக்குப் பதிலாக இரண்டு கடற்படைப் படகுகளையாவது பெற்று அந்த மக்களுடைய போக்குவரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென நான் இன்றைய நாளில் இச்சபையினூடாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

நெடுந்தீவில் உள்ளூர் மக்களின் போக்குவரத்துக்காக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் வண்டியொன்று மாவிலித்துறைக்கும் மேற்கு குருக்கள் மடத்தடி வரைக்குமான சேவையினை மேற்கொள்கிறது. அது நேரத்தை அனுசரித்து சேவையில் ஈடுபடுகின்றது. ஆனால், சிலவேளைகளில் எரிபொருள் தட்டுப்பாடு, திருத்தவேலைகள் போன்ற காரணங்களால் சேவை இடம்பெறுவதில்லை. நெடுந்தீவு ஒரு பெரிய நீண்ட தீவாகக் காணப்படுவதனால் அங்கு போக்குவரத்துக்கென இரண்டு பஸ்களாவது வழங்கப்படவேண்டியது மிக முக்கியமாகும்.

மேலும் நெடுந்தீவின் மேற்குக்கரையிலுள்ள பெரியதுறை முன்னர் ஒரு சர்வதேசத் துறைமுகமாகவும் கப்பல்களுக்கு ஓர் இளைப்பாற்றுத் துறைமுகமாகவும் இருந்தது. தற்போது இது பாவனையிலில்லை. கிழக்கிலுள்ள மாவிலித்துறைமுகமே இப்போது பாவனையிலுள்ளது. இதற்கு 1910ஆம் ஆண்டளவில் ஒருவகைக் கல்லாலான ஓர் அலைத்தடுப்புச் சுவரும், பின்னர் இரண்டு ஆற்றுக்கட்டைகளும் போடப்பட்டன. அந்நாட்களில் பாவனையிலுள்ள பாய்த்தோணிகளுக்கு இவை உரிய பாதுகாப்பை வழங்கின. 1935இல் ஓர் இறங்குதுறையும் அமைக்கப்பட்டது. ஆற்றுக்கட்டையிலிருந்து இறங்குதுறை வரையிலுமுள்ள கடல் ஆழமாக்கப்பட்டது. இது 1937இல் வந்த 'சில்வர் ஸ்பிறே' மோட்டார் வள்ளத்துக்குப் போதுமானதாயிருந்து. ஆனால் பின்னர் வந்த மோட்டார் படகுகளுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. இது இன்னும் ஆழமாக்கப்படல் வேண்டும். இத்துறைமுகமும் அதன் சுற்றுப்புறமும் முற்றுமுழுதாக இலங்கைக் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. இச்செய்கையினால் பொதுமக்கள் அசெளகரியங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன் பல துன்பங்களையும் அனுபவித்து வருகின்றனர். இது நிவர்த்திக்கப்பட வேண்டும்.

கல்வியை எடுத்துக்கொண்டால் நெடுந்தீவு வெளிக்கவனயீர்ப்புக்கள் இல்லாத கல்விக்கு உகந்த ஓர் இடமாக இருக்கிறது. முன்னர் அங்கு பதினாறு பாடசாலைகள் இருந்தன. தற்போது மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியால் அவை எட்டாகக் குறைந்துவிட்டன. பாடசாலைகளின் பெளதீக வளப் பற்றாக்குறை பாடங்களுக்குத் தகுந்த ஆசிரியர்களின்மை, பெற்றோரின் இடப்பெயர்வு போன்றன அதற்குரிய ஏதுக்களாகும். விசேட பாடங்களுக்கான ஆசிரியர்கள் பிரயாண கஷ்டம், தங்குமிட வசதியின்மை கூடிய வாழ்க்கைச் செலவு போன்றவற்றால் நெடுந்தீவில் சேவை செய்ய முன்வருவதில்லை. பாடசாலைகளை முகாமைத்துவம் செய்யும் உத்தியோகத்தர்களும் இவ்வூரில் தற்காலிக தங்குமிட வசதிகூட இன்மையால் அங்கு தங்கியிருந்து முறையான முகாமைத்துவம் செய்வதில்லை. இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் இன்றியமையாததாகும்.

நெடுந்தீவிலிருந்து பலர் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பட்டம் பெற்றிருக்கிறார்கள். நெடுந்தீவு மண் பல பட்டதாரிகளையும் வைத்தியர்களையும் பொறியியலாளர்களையும் உருவாக்கிய மண்ணாகும்.

அடுத்ததாக நெடுந்தீவின் சுகாதார சேவையை எடுத்துக்கொண்டால் அது ஒரு தனியான மாவட்ட வைத்திய அதிகாரி பிரிவாக உள்ளது. அங்குள்ள வைத்தியசாலையில் ஆண்-பெண் நோயாளரின் வாட்டுகளும் மகப்பேற்றுமனையுமுண்டு. அத்துடன், வெளி நோயாளர் பகுதியுமுண்டு. இவை எல்லாவற்றையும் கவனிக்க ஒரு வைத்திய அதிகாரி நியமிக்கப்படுவார். ஆனால், அவர் உத்தியோகபூர்வ வேலைகளைக் கவனிப்பதற்காக யாழ்ப்பாணத்துக்குப் போகவேண்டியுமுள்ளது.

சிலவேளைகளில் தனது சொந்தத் தேவைகளுக்காகவும் வெளியூர் செல்வதுண்டு. அதேசமயம் மோட்டார் படகு இல்லாத நேரங்களில் போனவர்கள் திரும்பிவரவும் முடியாது. அப்படியான வேளைகளில் நெடுந்தீவில் வைத்திய சேவைகளை கவனிக்க எவருமே இருக்கமாட்டார்கள். எனவே நெடுந்தீவுக்குக் குறைந்தது இரண்டு வைத்திய அதிகாரிகளையாவது நியமித்தல் வேண்டும். பொதுவாக வைத்திய அதிகாரிகள் நெடுந்தீவில் இருப்பதை விரும்புவதில்லை.

போக்குவரத்துக் கஷ்டங்கள், பொழுதுபோக்கு வசதிகள் இன்மை, உணவு வசதிகள் இன்மை போன்ற இன்னோரன்ன கஷ்டங்கள் அங்கு நிலவுவதைக் அதற்குக் காரணமாகக் குறிப்பிடலாம். இவ்வைத்தியசாலையில் ஆளணிப் பற்றாக்குறை, மருந்துப் பற்றாக்குறை போன்றனவுமுண்டு. இவ்வைத்தியசாலையின் நிச்சயமற்ற தன்மையின் காரணமாக மக்களும் பெரும்பாலும் நோயாளியை யாழ்ப்பாண வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று வைத்தியம் பெறுகின்றனர். கர்ப்பிணிப் பெண்களும் கடைசிவரை காத்திராமல் உரியகாலம் வருமுன்னரே யாழ்ப்பாணம் சென்றுவிடுகின்றனர்.

நெடுந்தீவு மூலிகைளுக்குப் பெயர்பெற்ற இடம். இம்மூலிகைகளைப் பயன்படுத்தி வைத்தியம் செய்யும் சித்த வைத்தியர்கள் பலர் முன்னர் இருந்தனர். தற்போது அவர்களும் எவருமேயில்லை. எனவே, அரசினர் வைத்தியசாலையைத் தரமான இரண்டுக்கு மேற்பட்ட வைத்தியர்களுடன் திறம்பட இயங்கவைப்பது இன்றியமையாதது.

விவசாயத்தைப் பொறுத்தவரை நெடுந்தீவில் பாரிய நீர் பற்றாக்குறை நிலவுகின்றது. நீர்ப்பாசனத்துக்கேற்ற குளங்களில்லை. முன்னர் பல குளங்களிலிருந்து ஏற்று நீர்ப்பாசன முறையில் நெல்லும் சிறுதானியங்களும் செய்கை பண்ணப்பட்டன. இக்குளங்கள் யாவும் தமிழரசர்களால் வெட்டப்பட்டவையாகும். வெட்டுக்குளம், பெரியகுளம், பேய்க்குளம் என்பன வெடியரசன் வாய்க்காலினால் ஒன்றுகொன்று தொடர்புபடுத்தப்பட்டன. குதிரை வளர்ப்பை மேம்படுத்திய எட்வேட் நோளன் என்னும் நெடுந்தீவு 'சுப்பிறின்டென்ரன்' 1811இல் வெட்டுக்குளத்தை வெட்டுவித்ததாகச் சொல்லப்படுகின்றது.

1814இல் ஏற்பட்ட கடல்கோள்வரை, இலங்கையில் வேறு எங்குமில்லாதவாறு நெடுந்தீவில் கோதுமை விளைவிக்கப்பட்டதென எட்வேட் நோளனே குறிப்பிட்டுள்ளார். அவருடைய வெட்டு வாய்க்காலினைக் கடலுடன் இணைத்ததன் அடிப்படையில் கடல்நீர் குளத்து நீருடன் சேர்ந்து இக்குளங்கள் யாவும் உவர் நீர்க்கழிகளாக மாறக்கூடிய சூழ்நிலைகளும் அடிக்கடி ஏற்படுவதுண்டு. இதனால் விவசாயமும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இருப்பினும் அண்மைக்காலம் வரையில் அங்கு மானாவாரிப் பயிர்ச்செய்கையாக வரகு சாமை மொண்டி போன்ற தானியங்கள் விளைவிக்கப்பட்டன. அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்ததன் காரணமாக இப்பொழுது அங்கு இத்தானியங்களின் உற்பத்தி அற்றுப்போய்விட்டது.

எஞ்சியுள்ள மக்களும் உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்காத காரணத்தினால் இத்தானிய உற்பத்திகளைக் கைவிட்டுவிட்டனர். காரணம் தரைப்பிரதேசத்தினுள் கடல் நீர் உட்புகுந்ததன் காரணமாக நிலம் உவர்த்தன்மையாகியதனாலும் காற்றரிப்புக் காடுகளையும் புற்றரைகளிலுள்ள நிழல் தரும் மரங்களையும் விறகுத்தேவைக்காகத் தறித்து ஏற்றுமதி செய்தமையினால் காற்றின்மூலம் மேல் மண் அரிப்புக்குட்பட்டதாலும் இந்நிலை ஏற்பட்டது எனலாம்.

கடல் நீர் உட்புகுந்த நோளன் வாய்க்கால் தற்பொழுது மறிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கடற்பெருக்கின்பொழுது கடல்நீர் உட்புகும் வேறு சில இடங்கள் கடற்கரை ஓரங்களிலுண்டு. இவற்றை மறித்து அரண் அமைத்தால் கடல்நீர் உட்புகுவதற்கான சாத்தியம் ஏற்படாது. காலப்போக்கில் தரைப்பிரதேசத்திலுள்ள உவர்த்தன்மையும் நீங்கிவிடும். மாரி காலங்களில் நெடுந்தீவில் உள்ள மேட்டு நிலங்களில் காய்கறிச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் கோடை காலங்களில் கடும் வெயில் காலநிலை காணப்படுவதாலும் கிணற்று நீர் உவர்நீராகி விடுவதனாலும் இப்பயிர்ச்செய்கை மேற்கொள்வது தடைப்பட்டுவிடுகிறது. இங்கு தென்னை, பனை போன்றனவும் வளர்ந்து பிரயோசனத்தைக் கொடுத்தன.

அங்குள்ள மக்கள் ஏற்கனவே உள்ள மரங்களின் வளங்களைப் பிரயோசனப்படுத்துகின்றார்களே தவிர மீள்நடுகை பற்றிச் சிந்திப்பதில்லை. இதற்கு கட்டாக்காலி கால்நடைகளின் தொந்தரவுகளும் ஒரு காரணமாகும். இப்பிரதேசம் மரமுந்திரிகை பேரீந்து போன்றவற்றை உண்டுபண்ணுவதற்கு உகந்த ஓர் இடமாகும். எட்வேட் நோளன் இப்பிரதேசத்தில் சணல் பயிர்ச்செய்கை மேற்கொண்டதன்மூலம் அரசாங்கத்துக்கு பாரிய வருமானத்தை ஈட்டிக் கொடுத்துள்ளார். தனிநாயக முதலி அபரிமிதமான பருத்தியை உற்பத்தி செய்து அவற்றைப் பஞ்சாகவும் நூலாகவும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து மக்களுக்குச் செல்வச் செழிப்பைக் காட்டியவர். இதனை ஒல்லாந்தர் குதிரை வளர்ப்புக்காக அழித்தார்கள்.

நெடுந்தீவு மந்தை வளர்ப்புக்குப் பெயர் பெற்ற இடம். மாடுகள் நிறைந்த இடமாகையால் போர்த்துக்கீசர் அதற்குப் பசுத்தீவு என்று நாமம் சூட்டினர். போர்த்துக்கீசரால் ஆரம்பிக்கப்பட்டு, ஒல்லாந்தரால் வியாபிக்கப்பட்டு, ஆங்கிலேயரான எட்வேட் நோளனால் மேலும் மெருகூட்டப்பட்ட குதிரைகளின் வாரிசுகள் இன்றும் உள்ளன.

அங்கிருந்த எருமைக் கிளைகள் யாவும் இப்பொழுது முற்றாக அழிந்துவிட்டன. இன்றும் சிலரால் செம்மறியாடும் வெள்ளாடும் வளர்க்கப்படுகின்றன. ஒல்லாந்தர் மந்தைகளின் பாவனைக்காக அறுநூறு கேணிகளைக் கட்டுவித்தார்கள் எனக் கூறப்படுகின்றது. இவற்றில் பல இப்பொழுது அழிந்துவிட்டன. ஒல்லாந்தர் புற்றரைகளில் நிழலுக்காகக் காட்டுப் பூவரசுகளையும் நாட்டுவித்தார்கள். இவை யாவும் உள்ளூர் பேக்கரி, வெளிநாட்டு ஏற்றுமதி போன்றவற்றுக்காகத் தறித்து அழிக்கப்பட்டுவிட்டன. காற்றுத்தடைக்கு மரங்களின்மையால் மண்ணரிப்பு ஏற்பட்டுப் புல்வெளிகளில் புல் செழித்து வளர்வதில்லை. அங்கு புல் தண்ணீர் பற்றாக்குறையினால் மாடுகள் குதிரைகள் அனைத்தும் பொலிவிழந்துள்ளன. பசுக்களில் பால் சுரப்பு மிகவும் குறைவடைந்துள்ளது. பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமாயின் புல்லையும் தண்ணீரையும் அதிகரிப்பதற்கான வழிவகைகளைக் கையாள வேண்டும். அத்துடன் நல்லினக் கலப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

நெடுந்தீவு கடற்றொழிலுக்கு உகந்த ஓர் இடம். அங்கு கடற்றொழிலில் ஈடுபட்டவர்கள் இன்று மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டு வருகின்றார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் சில அவர்களின் முன்னேற்றத்துக்கான சில உதவிகளைச் செய்துள்ளன. அவர்கள் மேலும் முன்னேற வேண்டுமாயின் நவீன தொழில்நுட்பக் கருவிகள் படகுகள் போன்றவற்றை அவர்களுக்குக் கிடைக்கச் செய்தல் வேண்டும். நெடுந்தீவிலே சூரிய வெப்பத்துக்கோ காற்றுக்கோ பஞ்சமில்லை. ஆனால் பிற நாடுகளைப் போன்று இவை இங்கு பயன்படுத்தப்படுவதில்லை. இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தினால் அவை மக்களுக்கு வரப்பிரசாதமாகவிருக்கும். அரசாங்கத்துக்கும் சிக்கனத்தைக் கொடுப்பதாக அமையும். தற்பொழுது டீசல் இயந்திரங்களின்மூலம் சில இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகின்றது. ஆனால் வீடுகள் தூரத்தூர உள்ளமையால் சகல மக்களும் மின்சாரத்தைப் பெறமுடியாத நிலையுள்ளது. நெடுந்தீவு முழுவதுக்குமான மின்சார விநியோகம் மிகமிக அவசியமானதாகும்.

நெடுந்தீவில் குடிநீர் தட்டுப்பாடு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடல்நீர் செயற்கையாகவும் இயற்கையாகவும் தரைப்பிரதேசத்தினுள் புகுந்துள்ளமையால் முன்னர் நன்னீர்க் கிணறுகளாக இருந்தவை தற்பொழுது உவர்நீர்க் கிணறுகளாக மாறிவிட்டன. இன்று ஒரு சில கிணறுகளே நன்னீரைக் கொடுத்து வருகின்றன. மக்களது அதிகரித்த பாவனையால் இந்நன்னீர்க் கிணறுகளும் உவர்நீராகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சர்வதேச இளைப்பாற்றுத்துறைமுகமாக இருந்த பெரியதுறைக் கடற்பரப்பில் கப்பல்களை நங்கூரமிட்டுவிட்டு நெடுந்தீவிலேயே குடிதண்ணீரை எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது.

அப்படியான இடத்துக்கு இன்று இந்நிலை ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் தொழில்நுட்பப் மேம்பாட்டினால் கடல் நீரையே நன்னீராக்கிப் பாவிக்கின்றனர். இவ்வுத்தியைப் பயன்படுத்தி அங்குள்ள ஒருசில கிணற்று நீரையாவது நன்னீர் ஆக்கினால் மக்கள் பெரிதும் பயனடைவர். தற்பொழுது ஒருசில இடங்களுக்கு குழாய்மூலம் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெறுகின்றது. அதுவும் திருப்திகரமான முறையில் இல்லை.

கடல் நீர் உட்புகுவதைத் தடுப்பதற்கான திட்டத்தின் பயனாக, நோளன் வாய்க்கால் மூலமாகவும் பனங்காணி வாய்க்கால் மூலமாகவும் கடல் நீர் உட்புகுவது தற்போது தடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் அணை போட்டு கடல் நீர் உட்புகுதல் தடுக்கப்பட வேண்டியுள்ளது.

இலங்கை சுதந்திர நாடாகும் முன்னரே இங்குள்ள காட்டு மரங்களும் பனை மரங்களும் தறிக்கப்பட்டு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய மரங்களும் உள்ளூரினதும் யாழ்ப்பாணக் குடாநாட்டினதும் விறகுத் தேவைகளுக்காகத் தறிக்கப்பட்டு அவை இருந்த இடங்கள் வனாந்தரமாக்கப்பட்டுவிட்டன. எனவே இவற்றை மீள்நடுகை செய்தால் மட்டுமே காற்றரிப்பைத் தடுத்துப் புற்றரைகளையாவது நல்ல நிலைக்குக் கொண்டுவரலாம்.

பொழுதுபோக்குக்கும் உல்லாசத்துக்கும் நெடுந்தீவு ஓர் உகந்த இடமாகும். ஆனால் இங்குள்ள குதிரைகளை மட்டுமே பிறருக்குத் தெரியும். இதைவிட உல்லாசப் பிரயாணிகளைக் கவரக்கூடிய பல இடங்கள் உண்டு. தமிழரசரால் கட்டப்பட்டு போர்த்துக்கேயரால் மீளமைக்கப்பட்ட கோட்டை ஒன்று உண்டு. ஒல்லாந்தரால் கட்டப்பட்ட ஆளுநர் விடுதி, விருந்தினர் விடுதி, படையினர் பாசறை மற்றும் புறாக்கூடு போன்றவையும் இங்கு உண்டு. ஆங்கிலேயரின் பிரதிநிதி நோளனால் கட்டப்பட்ட குதிரை லாயங்கள் தண்ணீர் தொட்டிகள், கிணறுகள் மற்றும் வாய்க்கால்கள் போன்றவையும் இங்கு உண்டு. இவற்றை ஒல்லாந்தர் அமைத்தனர் எனவும் சிலர் கூறுவர்.

தமிழ் அரசர் காலத்துக் கடல் தளபதி வெடியரசனின் கோட்டையும் இங்கு உண்டு. ஒரு பெரிய பெருக்கு மரமும் - அதாவது 15-20 பேரை உள்வாங்கக்கூடிய ஓர் அதிசய மரமும் - இந்தத் தீவிலே மிக முக்கியமான காட்சிப் பொருளாக இருக்கின்றது.

அங்கு தனிநாயக முதலியின் குடிமனையின் அழியாத சுவடுகளும் பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் உள்ளது. கடல் நீராடலுக்கு உகந்த கடற்கரைகளும் இங்கு உண்டு. ஆனால் உல்லாசப் பிரயாணிகளுக்கேற்ற மோட்டார் படகுகளோ தங்குமிட வசதிகளோ இங்கில்லை. அங்குள்ள ஒரு சிறிய அரசினர் விருந்தினர் விடுதியையும் அதன் சுற்றாடலையும் இலங்கைக் கடற்படையினர் ஆக்கிரமித்துவிட்டனர். இந்த நிலையில் நெடுந்தீவு மண்ணினுடைய வளர்ச்சி என்பது மிகக்கூடிய அளவில் பாதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது.

1996 ஆம் ஆண்டில் 4081பேரையும் 1999 இல் 5002பேரையும் 2002ஆம் ஆண்டில் 6322 பேரையும் 2005ஆம் ஆண்டில் 5658 பேரையும் 2008ஆம் ஆண்டில் 4129 பேரையும் 2010ஆம் ஆண்டில் 4792 பேரையும் கொண்டிருந்த நெடுந்தீவு மண் இன்று மீண்டும் மிளிர்ந்து வருகின்றது. அங்கிருக்கின்ற தனியான ஒரு கல்வி்க் கோட்டமும் தனியான ஓர் உதவி அரசாங்க அதிபர் பிரிவும் தரமுயர்த்தப்பட்டு நெடுந்தீவினுடைய வளர்ச்சி அதிகரிக்கப்பட வேண்டும். ஏனெனில் கடல் பயணத்தின்மூலம் சென்றடையக்கூடிய அதிகளவு மக்கள் வாழ்கின்ற ஒரு பெரும் தீவாகவும் கூடிய அளவில் உல்லாசப் பயணிகளைக் கவருகின்றதும் கூடிய வளங்களைக் கொண்டதுமான ஒரு தீவாகவும் நெடுந்தீவு இருப்பதனால் அந்த மண்ணினுடைய வளர்ச்சி என்பது யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமான ஒன்றாகும்.

அது எனது தாய் பிறந்த மண்ணாக இருப்பதனாலும் என்னுடைய பரம்பரைக்கு அது சொந்தமான மண் என்ற வகையிலும் அந்த நெடுந்தீவு மண்ணைப்பற்றி நான் என்னுடைய ஆழ்ந்தஇ மிகக்கூடிய அளவான கருத்துக்களை இந்தச் சபையிலே சமர்ப்பித்திருக்கின்றேன். இதனோடு இணைந்தவைதான் யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய தீவுப் பகுதிகளான புங்குடுதீவு, வேலணை, குறிகாட்டுவான், மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவு, சரவணை மற்றும் ஏனைய பகுதிகள். நெடுந்தீவைப் போன்று அங்கு மிக முக்கியமாக நயினாதீவு, அனலைதீவு மற்றும் பகுதிகளுக்கான போக்குவரத்துகளில் இன்று மக்கள் பல இடையூறுகளையும் மீள்குடியேறி வாழ்வதில் பல இடர்களையும் சந்திக்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் மிக அழகான பகுதிகளைக் கொண்ட தீவகம் இன்று மக்களுடைய பாவனைக்கு அல்லது மக்கள் குடியேறி வாழ்வதற்கு விருப்பமான இடமாக இல்லை. அங்கிருக்கின்ற இராணுவப் புறச் சூழ்நிலைகளும் மிகக்குறைந்த அளவிலான பொது வசதிகளும்தான் இதற்கு மிக முக்கியமான காரணங்களாகும்.

இன்று தீவகம் உட்பட, யாழ்ப்பாணத்தினுடைய முழுப்பகுதிகளையும் குடிநீர்ப் பிரச்சினை பாரிய அளவில் பாதித்திருக்கின்றது. நாங்கள் நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்ற எடுக்கின்ற நடவடிக்கைகளின்போது தனியான ஒரு வலயத்தைக் கொண்ட பிரதேசமான தீவகத்தையும் கருத்திற்கொள்ள வேண்டு்ம். மண்டைதீவு முதல் கச்சதீவு வரையும் உள்ள அந்தப் பிரதேசங்கள் மிகக் கூடிய அளவில் மக்களைக் கவரக்கூடிய தீவுகளாக இருக்கின்றன. அந்தப்பகுதி மக்களுடைய வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும் அவர்களுக்கான வளங்களைத் தேடிக் கொடுக்கவும்வேண்டிய மிக முக்கியமானதொரு காலகட்டம் இதுவாகும். ஆகவேதான் இன்றைய இந்த விவாத நாளிலே அதை ஒரு கருப்பொருளாகக் கொண்டு தீவகத்தினுடைய விடயங்களையும் இந்தச் சபையின் ஊடாக நான் வெளிக் கொண்டுவர எண்ணினேன்.

அதேநேரம் இன்னுமொரு விடயத்தையும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

அதாவது இன்று எமது நாட்டிலே முன்பள்ளிகளுக்கான கல்வித்திட்டம் ஒரு பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. முன்பள்ளிகளில் கற்பிப்பவர்கள் குறித்த கல்வித்தரம் பெற்றிருக்கவேண்டுமென்ற ஒரு வரையறை இல்லாமல் எவரும் கற்பிக்கலாமென்ற ஒரு சூழ்நிலை உண்டு. இலங்கையி்லே கல்வித்தரத்தின் வீழ்ச்சிக்கு முன்பள்ளிகளின் முக்கியத்துவம் உணரப்படாமையும் ஒரு காரணமாகும். முன்பள்ளிகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்கப்படுவதற்கான எந்த ஒழுங்குமுறைகளும் இந்த நாட்டிலே இல்லை. ஆகவே அரசினூடாக இதற்கான ஓர் ஒழுங்குமுறை மேற்கொள்ளப்பட வேண்டும். தகுந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சம்பளமும் வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த நாட்டிலே முன்பள்ளிகளுடைய சேவைகள் கூடியளவில் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோல கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிலே உள்ள தொண்டர் ஆசிரியர்களுடைய பிரச்சினை பற்றி நீண்டகாலமாக இந்த சபையினூடாக நாங்கள் குறிப்பிட்டு வந்திருக்கின்றோம். 2006ஆம் ஆண்டுகளில் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டபொழுது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை. இதனை இந்தச் சபையின் கவனத்துக்கும் பல தடவைகள் நாங்கள் கொண்டுவந்திருக்கின்றோம். அவர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் பரந்த அடிப்படையில் பணியாற்றியிருக்கிறார்கள். கெளரவ அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அவா்கள் பேசுகின்றபொழுது ஏற்கெனவே வேலையின்றியிருக்கின்றவர்களுடைய தொகையைக் குறைக்கும்வகையிலேயே நாட்டில் அபிவிருத்திகளையும் ஏற்றுமதி இறக்குமதிச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதாகச் சொன்னார். மேற்கொள்வதாகவும் அவர் சொன்னார்.

அந்தவகையில், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டப் பிள்ளைகளுடைய எதிர்காலத்துக்காக தங்களுடைய காலத்தைச் செலவு செய்து, கச்சிதமாகப் பணிகளை ஆற்றி வருகின்ற - யுத்தத்தின் மத்தியிலும் கல்விப் பணியாற்றிவந்த - அந்த தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனத்திலும் மிகக்கூடியளவு கவனமெடுத்து அவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அவ்வாறே இலங்கை பூராவுமுள்ள 1000 ற்கும் மேற்பட்ட கடமை நிறைவேற்றும் அதிபர்களுடைய நியமனங்கள் வழங்கப்படாமல் கடந்த 10 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகின்றன. இந்த கடமை நிறைவேற்றும் அதிபர்களுடைய நிலையிலே மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஏனெனில் தங்களுடைய ஆசிரிய தரத்தோடு இலங்கையிலே பல பாடசாலைகள் கல்வியிலே பிரகாசிப்பதற்கு அவர்கள் மிகக்கூடியளவு கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்கள். தன்னிகரற்ற, சுயநலமற்ற அந்த பணிக்காக இலங்கை பூராவும் இருக்கின்ற கடமை நிறைவேற்றும் அதிபர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு இந்தச் சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல இலங்கை வங்கியிலே பல்தர உதவியாளர்களாகக் கடமையாற்றவென 40 ற்கும் மேற்பட்டவர்கள் யாழ்ப்பாணத்திலே தற்காலிக நியமனம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளாகப் பணிபுரிகின்றார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. பல ஆண்டுகளாக அவர்கள் அந்த நியமனத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு இந்தச் சபை நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்த நேரத்திலே கேட்டு வாய்ப்புக்கு மீண்டும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum