அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பழைமையை மறுப்பதா? பழையதை மறப்பதா?

Go down

பழைமையை மறுப்பதா? பழையதை மறப்பதா? Empty பழைமையை மறுப்பதா? பழையதை மறப்பதா?

Post by rajeshwary Sat Feb 19, 2011 10:18 am

கடந்த கால சம்பவங்களை மீள்நினைவுக்குட்படுத்தல் என்பது, ஒரு ஆக்கபூர்வமான, ஒரு ஆரோக்கியமான பெறுபேற்றை தருவதன் பொருட்டேயாகும். இன்னும் சற்று ஆழமாக நோக்கின் இரண்டு மகுடங்களின் கீழ் வலுவிழந்து போவதும் வலிமை பெறுவதும் இயல்பானது.மன்னிப்பு என்ற சொற்பதம் முழுவதுமாக மறத்தலையா? அல்லது செறிவான நினைவுகளைப் பதித்த வண்ணம் மன்னிப்பதா? அல்லது இவை இரண்டையும் இரு தோணிகளாக்கி 'இராஜதந்திரம்' என்று கற்பிதம் செய்து காலை ஊன்றி நகர முற்படுதல் பலவீனமா?

இவற்றிற்கான பதில்களையும் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் இவற்றிற்கான நேர்த்தியான பதில்களை காண முற்படுகையில் தான் ஈழத்தமிழர் அடங்கலாக அனைத்துத் தமிழர்களின் விடிவும் வெளிச்சமடையும்.

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் நடைபெற்ற பல பேச்சுவார்த்தைகள் ஈற்றில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிய நிலையில் முடிவின்றி நிறைவானது. இது தனியவே எந்தத்தரப்பிலும் முழுமையான குற்றங்களைச் சுமத்த முடியாத நிலையிலும் 'பரஸ்பர விட்டுக்கொடுப்புகள்' இருபக்கமும் போதாமையான நிலை புலப்பட்டதையும் காணலாம்.

அண்மையில் ஊடகங்களில் வெளிவந்த இலங்கை அரசு + தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை இந்திய அழுத்தத்தின் பெயரில் தமிழ்மக்களின் நலனுக்கு வழிசமைக்கும் என்ற செய்தி பல கோணத்திலும் சிந்திக்க வைக்கிறது.

இலங்கை அரசுடன் பேசவேண்டுமென கூறுவது விட்டுக்கொடுப்புக்குள், மன்னித்தலுக்குள், மறத்தலுக்குள், பலவீனத்துக்குள் எதற்குள் அடங்கும்? சொகுசாக இருந்துகொண்டு நினைத்தபடி எதையும் சொல்லலாம்' என்ற மற்றுமொரு வாதமும் உள்ளது.

அதேவேளையில் சொல்லவேண்டியதை சொல்லாமல் விடுகின்ற பழியும் இன்னுமொரு பக்கம் உண்டு என்பதை மறுக்கவும் முடியாது. ஈழத்தமிழ் மக்கள் படும் துயரத்தினுள், அவர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை அவசரமாக செய்யவேண்டிய பொறுப்பும் தேவையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கீழ் தமிழ்மக்கள் ஒன்றுபட்டு இயங்கவேண்டிய நிலையும் உள்ளது. தேன் தேவை என்பதற்காக, நாயின் இருக்கக்கூடாத இடத்தில் இருக்கும் தேனை சுவைக்கவேண்டுமா? என்றொரு எண்ணமும் எழுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - இலங்கை அரசு நடாத்தப்போகும் பேச்சுவார்த்தைக்கு ஆதாரமாக, நடந்துமுடிந்த அகோரங்களை புறந்தள்ளி வைப்பதென்பது இலங்கை அரசுக்கு முழு இலாபம் என்பதை அறிதல் வேண்டும். சர்வதேச ரீதியாக இலங்கை அரசின் கெளரவம் அதன் செயற்பாட்டால் பின்னடைவு கண்டு வருவதை அனைவரும் அறிவோம். இந்நிலையை அகற்றுவதற்கு இலங்கை அரசு மேற்கொள்ளும் 'தந்திரோபாயங்களில்' இதுவும் ஒன்று.

வடகிழக்கு யுத்தம் ஏறத்தாழ மூன்று தசாப்த காலங்களிற்கு மேலாக உக்கிரமடைந்து பின்னடைவு அடைந்த நிலையில், மீண்டும் பிறிதொரு பரிமாணத்தில் இப்போரை நகர்த்த வேண்டிய நிலையில் தமிழ்மக்கள் உள்ளபோது இந்த 'கடந்தவைகளை மறக்கவேண்டும்' என இலங்கை அரசு நிபந்தனை விதிப்பது தமிழ்மக்களுக்கான தீர்வின் அடைவை கொடுப்பது போன்று பாவனை காட்டி வழமைபோல நிராகரிப்பதேயாகும். இதை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் இராஜதந்திரமென்று கொள்ளலாமா?

எகிப்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டம் தற்பொழுது வெற்றிகண்ட நிலையில், இலங்கை ஜனாதிபதியின் பதவிக்கு பலவழிகளாலும் பங்கம் ஏற்பட வாய்ப்புண்டு. ஒருபுறம் புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் போராட்டமும் மனித உரிமை ஆர்வலர்களின் வெறுப்பும், மறுபுறம் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியின்பால் சிங்கள மக்களின் போராட்டம், இன்னுமொரு புறம். ஐக்கியதேசியக் கட்சியின் அரச எதிர்ப்பாளர்களும் என்று இன்னும் பல கோணங்களாக ஜனாதிபதி மகிந்தவிற்கெதிராக விரிவடைய வாய்ப்புண்டு.

இந்த நிலையில் இலங்கை அரசை காப்பாற்ற நினைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோழமையை பாராட்டலாம். இது ஒருபுறமிருக்க,

பழைமைக்கு அர்த்தம் வேறு! பழையதுக்கு அர்த்தம் வேறு!

ஆனால் இரண்டுமே ஒன்றோடொன்று தொடர்புடையது. 'பழைமை' என்பதற்குள், தமிழ்மக்களின் பூர்வீகம், வாழ்வியல், நாகரீகம், திறமை, சுயநிர்ணயம், சுதந்திரம் போன்ற பல உள்ளடங்குகின்றது.

பழையது என்பதற்குள் சிங்களத்தினால் காலம் காலமாக தமிழ்மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பாதிப்புக்களையும், அரசியல் ஏமாற்றங்களையும் ஓரளவு சொல்லலாம்.

இவை இரண்டையும் ஒப்பு நோக்கும் போது 'பழையது' என்ற கசப்பான காயங்கள் ஏற்படுவதன் காரணி உரிமைகொண்ட 'பழைமை' என்பது தமிழ் மக்களுக்கு காலம் காலமாக சிங்களத்தால் மறுக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் வருவதனால் தான் ஆகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு + இலங்கை அரசுக்கும் ஏற்படப்போகும் பேச்சுவார்த்தை வெறுமனே இலங்கை அரசை காப்பாற்றுவதற்கான பேச்சுவார்த்தையாக அமைந்து விடக்கூடாது.

பேச்சுவார்த்தை என்பது ஒரு மறத்தலை அடிப்படையாக வைத்துக் கொண்டு நடைபெறுவதாக இல்லாது தமிழருக்கு பயன்தரும் உரிமைத்துவம் சார்பான விடயங்களை ஆதாரமாகக் கொண்டு நகருமாக இருந்தால் ஆரோக்கியமானதாக இருக்கும்.

பன்னெடும் காலமாக சிங்களவர்கள் ஏமாற்றிவந்த பாடம் இன்னமும் நினைவை விட்டு அகலவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை என்ற விசப்பரீட்சை தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு 'விடுதலை இயக்கம்' என்ற கருப்பொருளில் தக்க வைக்காது இலங்கை அரசின் கூற்றுப்படி 'பயங்கரவாதிகள்' என்ற களத்தினுள் தள்ளிவிடுமா என்ற அச்சம் ஏற்படுவதிலும் நியாயமுண்டு.

மறுவளமாகச் சிந்தித்தால் தமிழீழ விடுதலைப்புலிகளை 'பயங்கரவாத இயக்கம்' என்று காட்டுவதற்கு இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 'ஜால்ரா' போடுகின்றதா என்ற ஐயமும் ஏற்படுகின்றது.

இன்னமுமாக இந்தியாவின் அழுத்தமும் காரணமாக இருப்பின் அதன் நோக்கத்தின் படி பயங்கரவாதிகள் என்ற பட்டத்தை நிலை நிறுத்துவதாகவும் இருக்கலாம். எது எப்படியாயினும் ஒட்டு மொத்த பாதிப்பும், இத்தனை வருட காலமாக போரில் உழன்று கொண்டிருக்கும் தமிழ்மக்களையே சாரும்.

கடந்தவைகளை மறப்போம் என்பதை ஆதாரமாகக்கொண்டு இலங்கை அரசுடன் ஒரு உடன்படிக்கை காணப்படும் பட்சத்தில் இதுவரை நடந்த போராட்டங்கள் தமிழர் விடுதலை நோக்கிய போராட்டங்கள் அல்ல என்பதையும், உரிமைக்காகப் போரிட்டவர்கள் விடுதலை வீரர்கள் அல்ல பயங்கர வாதிகள் எனவும், மரணித்த வீரர்கள் மாவீரர்கள் அல்ல எனவும், மரணித்த மக்கள் குழந்தைகள் உட்பட அனைவரும் குற்றவாளிகள் எனவும் பிரகடனப்படுத்தப்பட்டால்த்தான் அந்த பேச்சுவார்த்தை சரியானதாக இருக்கும்.

மேலும் இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப் போகும் பயன்கள் என்னவென்றால், குறிப்பாக யாழ்நகரில் (வட கிழக்கு) மிகப் பிரமாண்டமாக திறந்துவிடப்படப்போகும் தமிழ் சிங்கள களியாட்ட மையங்கள், சிவப்பு விளக்கு பகுதிகள், அனுமதியுடன் காட்டப்படும் ஆபாசப்பட திரையரங்குகள், மிகவும் தரமான மதுபான நிலையங்கள், பாரிய புத்தர் சிலைகளும் கோயில்களும், சம்பூர் போன்று தமிழர் நிலங்களில் அனல் மின்நிலையங்களும் குடியேற்றங்களும், தமிழர் நிலங்களில் சிங்கள மக்களின் கலாசாரப் பகிர்வுடன் கூடிய ஒன்றிணைந்த வாழ்வு, ஈச்சிலம்பற்று - மலைநீலியம்மன் ஆலயம் புத்தராலயமானது போன்று இன்னும் பல இந்து ஆலயங்கள் பெளத்த ஆலயமாகுவது, சிங்களப் பெயர் மாற்றப்பட்ட தமிழர் புராண இடங்கள், பழமை வாய்ந்த தமிழர் பாரம்பரியம் நீங்கிய தமிழ் சிங்கள கலப்புடைய நவீன பாரம்பரியம் கொண்ட சமூகம் போன்ற பல.

வாருங்கள்! தமிழ்ச் சாதியினரே!

ஒன்றுகூடி இலங்கை அரசின்முன் நிர்வாணமாக நின்று சலுகைகளைப் பெற்றிடுவோம்.

மலையூர் பண்ணாகத்தான்
malaiyoorpannakam@hotmail.com

rajeshwary
rajeshwary
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum