அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அமெரிக்காவிடம் என்ன எதிர்பார்க்கிறோம்! - ஆய்வு

Go down

அமெரிக்காவிடம் என்ன எதிர்பார்க்கிறோம்! - ஆய்வு  Empty அமெரிக்காவிடம் என்ன எதிர்பார்க்கிறோம்! - ஆய்வு

Post by kaavalan Sat Mar 05, 2011 5:26 am

உலகின் உறுதிப்பாடு அமெரிக்கா முன்னெடுக்கும் கொள்கைகளில் தங்கியுள்ளன என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. உலக விவகாரங்களில் தலையிடவும் பொருத்தமான இடங்களில் அழுத்தம் பிரயோகிக்கவும் அமெரிக்கா ஒன்றாலே மாத்திரம் முடியும் என்ற கூற்றும் மிகைப் படுத்தப்பட்டதல்ல.
கடற்படை வலுவின் ஊடாக அமெரிக்கா பெருங்கடல் அனைத்தையும் அவற்றின் கடற்பாதைகள் உட்பட தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. வரலாற்றில் அமெரிக்கக் கடற்படைக்கு நிகரானதொன்றைக் காணமுடியாது.

அமெரிக்கா முன்னெடுக்கும் வெளிவிகாரக் கொள்கைகளில் தவறோ குறைபாடோ இருந்தால் அதன் எதிரொலி புவியெங்கும் உணரப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் அதியுச்ச ஆதிக்க நிலை உறுதி செய்யப்படுகிறது.

அமெரிக்கச் சாம்ராச்சியம் என்ற தரைப்பரப்பு இல்லாவிட்டாலும் அமெரிக்க ஆதிக்கத்தைக் கருத்தில் எடுத்தால் சாம்ராச்சியம் என்று கூற இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இது அமெரிக்க நலனைப் பாதுகாப்பதற்கும் உலகின் உறுதிப்பாட்டை நிலைபெறச் செய்வதற்கும் அத்தியவசியமான ஏற்புடமையாகும்.

அடுத்துவரும் பத்து வருடங்களில் உலகம் கூடுதல் சிக்கலான ஆபத்தான இடமாக இருக்கும் என்கிறார் ஜோர்ஜ் பிறீட்மன் (The Next Decade Where We have Been and Where We Are Going – George Friedman. ISBN – 978 0385 532 945 Doubleday)

இது அமெரிக்க நிர்வாகத்திற்கு ஆசிரியர் விடுக்கும் எச்சரிக்கையாக இல்லாவிட்டாலும் எதிர்வு கூறலாகவேனும் இருக்கும். மாறிவரும் அரசியல் பொருளாதார சூழலுக்குப் பொருத்தமான கொள்கை மாற்றங்களை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

தன்னைப் புதுப்பிக்கும் பேரிழமை அமெரிக்காவுக்கு என்றும் இருக்கிறது. கொள்கை முன்னெடுப்பில் இது தெளிவாகத் தெரிகிறது. முன்னைய அமெரிக்க நிர்வாகம் கடைப்பிடித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற கோட்பாடு அமெரிக்காவுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

அது மாத்திரமல்ல மனிதப் பேரழிவையும் இந்தக் கொள்கை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர்கள் பெருமளவு உயிரிழப்பைச் சந்தித்ததற்கு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற ஜோர்ஜ் புஷ் நிர்வாகம் வகுத்த அதன் தாக்கம் பற்றிய சிந்தனையற்ற கொள்கை காரணமாகிறது.

இதன் வீச்சுக் காரணமாகச் சர்வதேச சமூகம் ஈழத்தமிழர்களின் மனிதப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்தவோ நிவாரணம் அளிக்கவோ தவறிவிட்டது (War Crimes In Sri Lanka Crisis Group No 191 of 17 May 2010) அமெரிக்காவின் ஏனோ தானோ என்ற போக்கு உயிரிழப்பைப் பன்மடங்காக்கி உள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஒக்ரோபர் 2009ல் சிறிலங்கா பற்றி வெளியிட்ட அறிக்கையில் மனித நேயச் சட்டங்கள் மீறப்பட்டதற்கான சம்பவப் பட்டியல் தரப்பட்டாலும் “இவை உண்மையில் நடந்தவை தானா என்ற முடிவை எட்ட முடியவில்லை” என்ற குறிப்பும் அதே அறிக்கையில் காணப்படுகிறது.

இவை சர்வதேசச் சட்டங்களை மீறியதற்கான ஆதாரமா என்பதையும் தீர்மானிக்க முடியவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவிடம் இருந்த செய்மதிப்படங்கள் மற்றும் மனிதர்கள் மூலம் பெறப்பட்ட புலனாய்வுத் (Human Intelligence) தகவல்கள் பற்றி இந்த அறிக்கை குறிப்பிடவில்லை

அமெரிக்காவில் அதிபர் மட்ட மாற்றம் ஏற்பட்டாலும் பழைய நிர்வாகத்தின் இலங்கை அரசிற்குச் சார்பான போக்கு மாறவில்லை என்பதை மேற்கூறிய அறிக்கை வெளிப்படுத்துகிறது. என்றாலும் அதில் ஐ.நா. விசாரணைக்குப் போதுமான தகவல்கள் நிறைய இடம்பெறுகின்றன.

ஐநாவைச் செயற்படத் தூண்டும் வலுவுள்ள அமெரிக்கா தனது கடமையைச் செய்யத் தவறியமையால் “உலகில் நடக்கும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு ஐ.நா.வும் அதன் பலதரப்பட்ட அலகுகளும் முக்கியமாகச் செயற்பட வேண்டிய காலகட்டத்தில் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் ஐநாவும் தவறிழைத்துள்ளன” என்று ஐநாவிற்கான நோர்வேயின் துணைத் தூதுவர் மோனா யூல் தெரிவித்துள்ளார். (Norwegan Deputy Ambassador To The UN Ms Mona Juul Quoted In Aftenposten)

சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா.வும் செயலாளர் நாயகமும் பின்னடித்ததற்கு இந்தியாவும் சீனாவும் பிரயோகித்த அழுத்தம் காரணமென்று இன்னர் சிற்றி பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது. தனது வல்லரசு அந்தஸ்தை அமெரிக்கா விட்டுக்கொடுத்த பெருந்தவறை இது எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்காவின் மென்மையான போக்கால் தூண்டப்பட்ட சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச “அது ஐ.நா.வாகவோ வேறு நாடாகவோ இருந்தாலென்ன நாங்கள் அல்லது நான் இந்த நாட்டில் விசாரணை நடக்க அனுமதிக்க மாட்டோம். அதற்குக் காரணம் இல்லை. இந்த நாட்டில் ஒரு தவறும் நடக்கவில்லை என்றுள்ளார்.

(BBC World News Asia Today 2 February 2010) மேற்கூறிய கோத்தபாய ஒரு அமெரிக்கக் குடிமகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வேறு நாடாகவோ என்று குறிப்பிட்டது அமெரிக்காவை மாத்திரமே என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.

அமெரிக்காவின் நிலப்பரப்புப் பாதுகாப்பு, அதன் வல்லரசு மேலாதிக்கப் பேணல் என்பனவுடன் சர்வதேச பொருளாதார ஒழுங்கின் சீரான இயக்கம் என்பன மூன்றும் அமெரிக்க தேசிய நலனில் முக்கிய பகுதிகளாக அடையாளம் காணப்படுகின்றன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற சித்தாந்தம் அமெரிக்காவுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சர்வாதிகார அரசுகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மக்களைப் பயங்கரவாதிகளாக அது பார்த்தது. சர்வாதிகார அரசுகள் நடத்திய அடக்கு முறைகளுக்கு அது ஆதரவு நல்கியது.

இலங்கையில் ஏன் எதற்காகத் தமிழ் மக்கள் போராடுகிறார்கள் என்பதை அமெரிக்க நிர்வாகம் எதிர்கொள்ள மறுத்து விட்டதோடு தமிழர்களுடைய நியாயமான போராட்டத்தை பயங்கரவாத நடவடிக்கை என்று முத்திரை குத்தியது.

இந்த வரலாற்றுத் தவறைத் திருத்திக்கொள்ள அமெரிக்காவினால் முடியும். அதற்கான சமிக்ஞைகள் இப்போது நடக்கும் மத்திய கிழக்கு கொதிநிலையில் அமெரிக்காவின் நிலைப்பாடு மூலம் தென்படுகின்றன.

ஏன் அமெரிக்காவை வெறுக்கிறாய் என்று ஒரு அடித்தட்டு அரபுக் குடிமகனைக் கேட்டால் அவனுடைய பதில் இப்படித்தான் இருக்கும். எம்மை நசுக்கிப் பிழியும் சர்வாதிகாரக் குடும்ப ஊழல் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குகிறது. இரண்டாவதாக அது இஸ்ரேலுக்குச் சாதகமாக நடக்கிறது.

முதலாவதைப் பொறுத்தளவில் அமெரிக்கா தனது வழமைக்கு மாறான நிலைப்பாட்டை இப்போது எடுத்துள்ளது. தனது சர்வாதிகார நண்பர்களைக் கைவிட அது துணிந்துள்ளது. ஒபாமா நிர்வாகம் மக்கள் எழுச்சியைப் பயங்கரவாதம் என்று கண்டிக்காமல் விட்டதைக் கொள்கை மாற்றமாக ஏற்றுக்கொள்ள முடியும்.

லிபியாவின் 41 வருடச் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்த போது முவமார் கடாபி மக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை எடுத்தார். இதனால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது.

ஐ.நா. பாதுகாப்புச் சபை உடனடி நடவடிக்கை எடுத்தது. அமெரிக்கா தலைமையினால் பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகளும் ஏகமனதாகத் தடைகளை விதித்தன. லிபியாவை நெருக்கடிக்குள்ளாக்கும் தடைகள் (Biting Sanctions) என்று அமெரிக்க நிர்வாகம் அவற்றை விவரித்தது.

இலங்கை விவகாரம் பாதுகாப்புச்சபை முன் வந்தது நினைவிருக்கலாம். அமெரிக்கா விலகி நின்றது. ரஷ்யாவும் சீனாவும் அது உள்நாட்டு விடயம் (Internal Matter) என்று விவாதத்தைத் தடுத்தன. இப்போது இரு நாடுகளும் லிபியா விவகாரத்தைப் பொது விவகாரமாக ஏற்றுள்ளன.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிறைவேறிய தீர்மானத்தில் கடாபி அரசு நடத்திய மனிதப் படுகொலைகளுக்காக இந்த விவகாரம் உடனடியாக சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற முக்கிய அம்சம் உள்ளடக்கப்பட்டுள்ளது. (Immediate Referral To The ICC)

சர்வதேச நீதிமன்றம் சிவிலியன்களைக் கொல்வதற்குப் பொறுப்பானவர்களை விசாரணை செய்வதற்கும் தண்டிப்பதற்கும் இந்தத் தீர்மானம் அதிகாரம் அளிக்கிறது.

இந்தத் தீர்மானம் தமிழீழ மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது மாத்திரமல்ல இப்படியும் நடக்குமா என்று கேட்க வைக்கிறது. நான்காம் கட்ட ஈழப் போரில் மக்கள் அவலம் உச்சமடைந்த போது பார்வையாளராக மாத்திரம் இருந்த பாதுகாப்புச் சபைக்கு எங்கிருந்து வந்தது இந்த நடவடிக்கைத் தீவிரம்?

ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சுசான் றைஸ் (Susan Rice) ஒருபடி மேலே போய் “பொதுமக்களைப் படுகொலை செய்வோர் தனிப்பட்ட முறையில் பொறுப்புள்ளவராகத் தீர்மானிக்கப்படுவர்” என்றார். (Those Who Slaughter Civilians Will Be Held Personally Responsible)

பிரித்தானியாவின் ஐ.நா. தூதுவர் மார்க் லயல் கிரான்ற் (Mark Lyall Grant) ஐ.நா. விதித்த தடைகள் “சர்வதேச சமூகத்தின் ஆழ்ந்த கவலை, உண்மையில் கடுஞ் சினத்தை” வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

அமெரிக்கா செனற் சபை வெளியுறவுக் குழு வெளியிட்ட 2009 டிசம்பர் 7 அறிக்கையின் தலைப்பு சிறிலங்கா “போர் முடிந்தபின் யூ.எஸ். தந்திரோபாயத்தை மீளமைத்தல்” (Sri Lanka Re-charting US Strategy After The War) என்றிருக்கிறது.

அதாவது போர் முடியும் வரை காத்திருந்த அமெரிக்கா தனது தேசிய நலனை முன்னெடுக்கும் நோக்கில் நுழைவதற்கான வரைபடம் என்பது இந்தத் தலைப்பின் பொருள். ஈழத்தமிழர்கள் ஒபாமா நிர்வாகத்தால் எவ்வளவு தூரம் போரின் போது ஏமாற்றப்பட்டார்கள் என்பதை முள்ளிவாய்க்காலில் நின்ற போது உணர்ந்துள்ளோம்.

ஒபாமாவின் உத்தரவுப் படி அமெரிக்காவின் ஏழாவது கடற்படை முல்லைத்தீவை நோக்கி வருகிறது என்ற கதை அங்கு அடிபட்டது. அமெரிக்க விமானங்கள் வரப்போகின்றன என்ற நம்பிக்கையில் வானத்தைப் பார்த்த படி உயிர் விட்டோர் அந்த சதுப்பு நிலக் கடலோரத்தில் சடலமாகக் கிடந்தனர்.

மக்களின் விடுதலைப் போருக்கு மறுப்புத் தெரிவிக்கும் அமெரிக்க அரசின் போக்கில் அப்போது மாற்றம் ஏற்படவில்லை.

பிணம் தின்னிக் கழுகு போல் போர் முடியட்டும் என்று காத்திருந்த அமெரிக்க செனற்றின் அறிக்கை ஓரிடத்தில் “ஒபாமா நிர்வாகம் வடக்கில் எழுந்த மனிதநேய நெருக்கடியில் கவனஞ் செலுத்தியபடி அரசியல் உறவைப் புதுப்பித்தல் பத்திரிகைச் சுதந்திரம் ஆகியவற்றில் அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அரசை அழுத்தம் கொடுக்கின்றது” என்றது.

சுசான் றைஸ் கொட்டிய சுடு சொற்களுக்கும் இதற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை அமெரிக்க அரசில் ஏற்பட்டுள்ள கொள்கை மாற்றமாகக் கொள்வதில் தவறில்லை. இந்த அடிப்படையில் ஈழத்தமிழர்கள் அமெரிக்க நிர்வாகத்திடம் உரிமையோடு நியாயம் கேட்கிறார்கள்.

ஈழத் தமிழர்கள் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கையை முன்னெடுத்ததில்லை போராடி விடுதலை பெற்ற அமெரிக்காவைப் போல் நாமும் விடுதலைபெறத் துணிந்தோம். இரட்டைக் கோபுரத் தாக்குதல் கொடுமையை நாங்கள் கண்டித்துள்ளோம். எதற்காக எமக்குப் பயங்கரவாத முத்திரை?

அமெரிக்க நிர்வாகத்தின் உயர் மட்டத்தில் புதிய காற்று வீசுவதை மத்திய கிழக்கு நடப்புக்கள் ஊடாகக் கண்டுள்ளோம். போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை தண்டனை ஆகியவற்றை சிறிலங்கா அரசுத் தலைவர்கள் இராணுவ அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக வேகமாக முடுக்கி விடும்படி கேட்கிறோம்.

தமிழீழ மக்களுடைய அடிப்படை அரசியல் மற்றும் மனித உரிமைகளை சர்வதேச சமூகமும் அமெரிக்க அரசும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களுடைய வாழ்விட ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும். தமிழ் மக்களுடைய அடையாளங்கள் பாதுகாக்கப்படுவதோடு ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வட கிழக்கில் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முயற்சி செய்வதோடு சிவில் நிர்வாகம் நிறுவ அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். இவற்றை ஒபாமா அரசு செய்யுமென தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவை புறக்கணித்து இலங்கை, அமெரிக்காவிடம் ரேடார்களை கோரியது : விக்கிலீக்ஸ்
» விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக நெடியவன்: பயங்கரவாத ஆய்வு நிபுணர் கருத்து
» அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...!
» இலங்கை இராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? நாம் புலிப்பால் குடித்த பரம்பரை - விஜய்
» இலங்கை இராணுவத்தின் இப்போதைய கனவு என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum