அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இலங்கைக்கு போரில் உதவிய நாடுகள் விசாரணைகளுக்கு முகம் கொடுக்குமா?

Go down

இலங்கைக்கு போரில் உதவிய நாடுகள் விசாரணைகளுக்கு முகம் கொடுக்குமா?  Empty இலங்கைக்கு போரில் உதவிய நாடுகள் விசாரணைகளுக்கு முகம் கொடுக்குமா?

Post by kaavalan Mon May 02, 2011 4:27 pm

இலங்கை அரசாங்கம் மற்றும் படையினர் மீது போர்க்குற்றம் சுமத்தும் வகையில் வெளியாகியுள்ள ஐ.நா.வின் அறிக்கையைத் தோற்கடிக்க அரசாங்கம் பலவழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இந்த விவகாரத்தை ஒரு சர்வதேச சிக்கலாக மாற்றுகின்ற முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இலங்கை தொடர்பான விசாரணைக்குழு ஒன்றை அமைக்கும்போது அதனால் சர்வதேச மட்டத்தில் ஏற்படக் கூடிய தாக்கங்கள் என்ன என்பது பற்றிக் கவனம் செலுத்துவது முக்கியமானது.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை என்பது முதலாவது கட்டம் மட்டுமே. அதற்கு அடுத்தடுத்த கட்டங்களில் மேல் நடவடிக்கைக்குச் செல்லும் போது தான் சிக்கல்கள் புதிது புதிதாக உருவெடுக்கும். அத்தகைய சிக்கல்களை உருவாக்கி விடும் முயற்சிகளும் அரசதரப்பில் முன்னெடுக்கப்படுகின்றன.

போரின் இறுதிக்கட்டத்தில் அப்பட்டமான முறையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. மனிதகுலத்துக்கு விரோதமான குற்றங்களும் அரங்கேறியுள்ளன என்பதை நிபுணர்குழு உறுதியாச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்கும் போது, நேரடியாகப் போரில் பங்கெடுத்த தரப்புகளின் மீது குற்றம் சுமத்தப்படுமா அல்லது மறைமுகமாகப் போரில் பங்கெடுத்த தரப்புகள் மீது குற்றம் சுமத்தப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

கடந்தவாரம் பி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு கொழும்பிலுள்ள ஐ.நா தலைமையகத்தின் பேச்சாளராக இருந்த கோர்டன் வைஸ் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்பு விபரங்களை வெளிப்படுத்தியதற்காக அரசாங்கத்துடன் முரண்பட்ட அவர், பின்னர் அந்தப் பணியில் இருந்து விலகி அவுஸ்திரேலியா சென்றார்.

அவர் இலங்கையில் தனது அனுபவங்கள் பற்றிய ஒரு நூலையும் எழுதியுள்ளார் அதில் போர்க்குற்றங்கள் பற்றிய விவகாரங்கள் பலவும் இடம்பெற்றுள்ளன.

அவர் பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் இந்தப் போருக்கு உதவிய நாடுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா புலனாய்வு உதவிகள் வழங்கியதாகவும், களமுனையில் இருந்து கூட அதற்குப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துக் கொண்டிருந்ததாகவும் கோர்டன் வைஸ் கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை இந்தியா நன்கு அறிந்திருந்ததாகவும், ஆனால் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்ததால் அதுபற்றிக் கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் என்று இந்தப் போருக்கு ஆயுத உதவிகளை வழங்கிய நாடுகளின் பட்டியல் மிக நீண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது முக்கியமானதொரு விடயம்.

இலங்கை அரசு போரை நடத்தியதற்குப் பக்கபலமாக இருந்த பல நாடுகள் உள்ளன. தனியே இந்தப் போரை அரசாங்கம் மட்டும் நடத்தவில்லை. எல்லாவிதமான உதவிகளையும் பல்வேறு நாடுகள் வழங்கியதால் தான் இறுதிப் போரை அரசாங்கத்தினால் முன்னெடுக்க முடிந்தது. வெற்றிபெறவும் முடிந்தது.

பொருளாதார உதவிகள், ஆயுத உதவிகள், புலனாய்வு உதவிகள், அரசியல் ஆதரவு என்று பலவிதங்களில் இந்தப் போருக்கான சர்வதேச ஆதரவு அரசுக்குக் கிடைத்து வந்தது.

பொருளாதார உதவிகள் செய்த நாடுகளைப் பட்டியலிட்டால், அது மிகவும் நீளமானது. மேற்குலக நாடுகள் ஜப்பான், சீனா போன்றனவெல்லாம் இதற்குள் அடங்கும்.

ஆயுத உதவிகள் செய்த நாடுகளைப் பட்டியலிட்டால், இந்தியா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல், அமெரிக்கா, செக் குடியரசு, ரஷ்யா, உக்ரேன் என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது.

புலனாய்வு உதவிகளை வழங்கிய நாடுகளைப் பட்டியலிட்டால், இந்தியா அதில் முக்கியமானது. அதைவிட அமெரிக்காவின் புலனாய்வு உதவிகளும் இலங்கைக்குக் கிடைத்திருந்தன. வேறும் பல நாடுகள் புலனாய்வு ஒத்துழைப்புகளைப் புலிகளுக்கு எதிரான போரின் போது வழங்கியிருந்தன.

அரசியல் ஆதரவு என்று வரும்போது, அதற்கு உலகில் பெரும்பாலான நாடுகள் இலங்கை அரசின் பக்கமே நின்றன. அதாவது, போரை நிறுத்துமாறு வலியுறுத்தவில்லை அதற்கு அழுத்தம் கொடுக்காமல் ஆதரவு கொடுத்தன. அத்துடன், போரை நிறுத்தும் ஏனைய முயற்சிகளையும் தடுத்தன.

இந்தவகையில் ஐ.நா. கூட போரை நிறுத்த அழுத்தம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

இப்படியாக இந்த நான்கு வகைகளிலும் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய நாடுகளையும் விசாரணை செய்ய வேண்டும் என்ற ஒரு கட்டம் ஒரு போதும் வரப்போவதில்லை.

இப்படியான சிக்கலுக்குள் சிக்கிப் போனால், சர்வதேச விசாரணைகளில் இருந்து இலங்கை அரசு இலகுவாகத் தப்பித்துக் கொள்ளும்.

அத்துடன், இலங்கைக்கு தாம் ஆதரவளித்ததை எந்த நாடும் ஏற்றுக் கொள்ள விரும்பவும் போவதில்லை.

இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்களுக்காக குற்றக்கூண்டில் ஏற இந்தியாவோ சீனாவோ அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடுகளோ தயாரில்லை.

இப்படி எல்லா நாடுகளையும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பினும், அது ஒருவகையில் சர்வதேச விசாரணைக்குழுவுக்கான அழுத்தங்களை பலவீனப்படுத்தவே செய்யும்.

இலங்கை அரசாங்கம் கேட்ட உதவிகளையெல்லாம் இந்த நாடுகள் வழங்கியதற்கு பல காரணங்கள் இருந்தன.

முதலாவது புலிகள் அமைப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்ற எண்ணம்.

இரண்டாவது இலங்கை அரசை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற வெறி.

மூன்றாவது தமது ஆயுத தளபாடங்களை சந்தைப்படுத்தம் வியாபார நோக்கம்.

இந்த மூன்று பிரதான நோக்கங்களையும் அடைவதற்கே உலக நாடுகள் போருக்கு ஆதரவாக நின்றன. உதவிகளை வழங்கின.

இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதை அனைத்து நாடுகளும் நன்றாக அறிந்திருந்தன. ஆனாலும், அதுபற்றி அப்போது வாய் திறக்கவில்லை.

இலங்கை அரசு அவசரமாகக் கேட்ட ஆயுதங்களை வழங்கிய நாடுகளுக்கு, போர்க்களத்தின் நிலைமையையும் தாம் வழங்கும் ஆயுதங்களின் தன்மைகளையும் வைத்துப் பார்க்கும் போது அங்கு என்ன நடைபெற்றிருக்கும் என்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.

ஆனால், அதையெல்லாம் அந்த நாடுகள் கண்டு கொள்ளவில்லை. இந்தவகையில் பொதுமக்களின் இழப்புகளைக் கண்டு கொள்ளாது, ஆயுதங்களை வழங்கிய, புலனாய்வுத் தகவல்களைப் பரிமாற்றிய நாடுகளெல்லாம் குற்றக்கூண்டில் நிற்க வேண்டியே இருக்கும்.

அழிவுகளுக்கான தார்மீகப் பொறுப்பை அவையும் ஏற்றேயாக வேண்டும். ஆனால், நடைமுறையில் இது ஒருபோதும் சாத்தியமான விடயம் அல்ல. அப்படி அனைத்துத் தரப்பினரையும் கூண்டில் நிறுத்திப் பார்க்க யாராவது விரும்பினால் அது முட்டாள்தனம்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் புலம்பெயர் தமிழர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. போரின் போது புலிகளுக்கு அவர்களே ஆதரவாக இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், போரின் போது இலங்கை அரசுக்கு உதவிகளை வழங்கிய துணையாக நின்ற நாடுகள் பற்றி எதுவுமே குறிப்பிடப்பட வில்லை.

இது ஒரு உண்மையைப் புரிய வைத்துள்ளது. எந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும், இலங்கை அரசை மையப்படுத்தியே அமையுமே தவிர, அதற்கு உதவிய நாடுகளை மையப்படுத்தியதாக இருக்காது என்பதே அந்த உண்மை. இந்த உண்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இறுதிக் கட்டப் போரில் நிகழ்ந்தேறிய கொடுமைகளுக்குப் பொறுப்புக் கூறுதல் என்று வரும் போது, நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீதான நடவடிக்கையை வலியுறுத்துவதற்கு அப்பால் செல்ல எந்தவொரு தரப்பாவது முயன்றால், அது விழலுக்கு இறைத்த நீராகவே அமையும்.

அத்துடன், அது சர்வதேச போர்க்குற்ற விசாரணை முயற்சிகளைத் தோற்கடிக்கும் காரியமாகவும் அமைவது திண்ணம்.

சுபத்ராஇலங்கைக்கு போரில் உதவிய நாடுகள் விசாரணைகளுக்கு முகம் கொடுக்குமா?  Indian_radaar
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் முயற்சி – சார்லி மகேந்திரன்
» போரில் காணாமல் போனவர்களை தேடித் தருவதாக கப்பம் பெற்ற இருவர் வவுனியாவில் கைது
» கொலைகாரர்களுக்கு அனுமதி வழங்கும் நிறுவனமாக ஐக்கிய நாடுகள் சபை - கும்புறுகமுவே வஜிர தேரர்
» பிரித்தானியா விஷேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பவுள்ளது
» இலங்கைக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்து செல்வதாக இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவர் உறுதிப்படுத்துகின்றார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum