அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முள்ளிவாய்க்காலின் பின்னரும் முடிவுக்கு வராத யுத்தம்

Go down

முள்ளிவாய்க்காலின் பின்னரும் முடிவுக்கு வராத யுத்தம் Empty முள்ளிவாய்க்காலின் பின்னரும் முடிவுக்கு வராத யுத்தம்

Post by kaavalan Mon Jan 03, 2011 1:15 am

முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 மே 19ஆம் திகதி முடிவுக்கு வந்தது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் மட்டும் தான். அத்தோடு இலங்கையில் போர் ஓய்ந்து விட்டதென்று கருதிவிடக் கூடாது. அந்தப் போரின் தொடர்ச்சியை இப்போதும் அரசாங்கம் எதிர்கொண்டவாறே இருக்கிறது.
இப்போது அரசாங்கம் எதிர்கொள்வது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போன் விளைவாகத் தோன்றிய இன்னொரு துணைப் போரையே.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கின்ற போர் தான் அது.

நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சியைக் காண வேண்டுமானால் இந்தப் போரையும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இருக்கிறது.

முன்னர் புலிகளுக்கு எதிரான போரில் அரசாங்கம் எந்தளவுக்கு மோசமான நிலையில் இருந்ததோ அதேபோன்ற மோசமான நிலையில் இந்த விடயத்திலும் தான் இப்போது இருக்கிறது.

நாடு முழுவதிலும் இப்போது முக்கியமான பிரச்சினை கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் குற்றங்கள் என்பன தான்.

போருக்குப் பின்னர் இத்தகைய குற்றச்செயல்கள் தலைவிரித்தாடுகின்றன.

பெரும்பாலான குற்றச்செயல்களின் பின்னணியில் இருந்ததாக படைகளில் இருந்து தப்பிச் சென்ற படையினர் அல்லது சேவையில் உள்ள படையினரே இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்தக் குற்றச்செயல்களுக்கு நவீன துப்பாக்கிகளை, கிரனேட்களைப் பயன்படுத்துவதும் உறுதியாகியுள்ளது.

நவீன ஆயுதங்களைக் கையாளும் பயிற்சிகளையும், குற்றச்செயல்களைச் செய்து விட்டு லாவகமாகத் தப்பிச் செல்வதற்கான பயிற்சிகளும் திறமையும் இவர்களிடம் அதிகமாகவே இருப்பது முக்கிமானதொரு விடயம்.

இதன்காரணமாக குற்றங்களைச் செய்த பெரும்பாலானவர்களைக் கைது செய்யவோ கண்டுபிடிக்கவோ முடியாமல் திணறுகிறது பொலிஸ் தரப்பு.

போர் ஒன்றின் பின்னர் இத்தகைய மோசமான சமூகச்சீரழிவு ஏற்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. பொதுவான உலக வழக்கமே இது.

ஆனால் இலங்கை அதை சற்று அதிகமாகவே எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இதற்கு அடிப்படைக் காரணம் மோசமானதொரு போரைப் படையினர் எதிர்கொண்டதும் அதற்குப் பின்னர் வெறுமையானதொரு சூழலை அவர்கள் எதிர்கொள்வதும் தான்.

கடந்த முப்பதாண்டுகளில் இலங்கைப் படைகள் மிகப்பெரியளவில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு வீங்கிப் பெருத்துப் போயுள்ளன.

போரை வெற்றி கொள்ளுதல் ஒன்றே அதன் பிரதான பணியாக இடப்பட்டிருந்தது.

இதற்காக ஒவ்வொரு நாளும் படையினர் சேர்க்கப்பட்டனர்.

உடனுக்குடன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்கள் போர்முனைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர்.

ஆட்சேர்ப்பு, பயிற்சி, போர்முனை என்று தொடங்கிய இவர்களின் வாழ்வியல் சூழலில் இப்போது ஒரு சூனியமான நிலை தோன்றியுள்ளது.

தொடர்ச்சியாக குண்டுச்சத்தங்களின் மத்தியில் வாழ்ந்த ஒருவரால் நிசப்தமான சூழலில் வாழ்வது கடினமானதாக இருக்கும்.

இதைப் பலரும் கேலி செய்யலாம். ஆனால் அது தான் உண்மை.

இசைவாக்கம் அடைந்து விட்ட எத்தகைய வாழ்வுச்சூழலில் இருந்தும் விடுபடுவது சிக்கலானதே.

இது போருக்குள் வாழும் மனிதர்களின் மனநிலைக்கும் பொருத்தமானதே.

1980களில் படையினன் துப்பாக்கி முனை யாரையும் குறிபார்க்கலாம் என்ற நிலை இருந்து வந்தது.

அவர்களைக் கேள்வி கேட்க யாருமற்ற சூழல் காணப்பட்டது.

அதற்குப் பிறகு வடக்கில் பெருந்தொகையான படையினர் முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.

வருடக்கணக்காக அவர்கள் குறிப்பிட்ட சில ஏக்கர் பரப்பளவுள்ள முகாம்களுக்குள் அடைபட்டு கிடந்தார்கள்.

பார்த்துப் பார்த்து சலித்துப் போன அதே முகங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.

தமது காவல் நிலைக்கு முன்னால் சூனியமாகக் கிடக்கும் பற்றைகளையும் காடுகள், வயல்களையும் தான் பார்க்க முடிந்தது.

காவலரண்களுக்கு முன்னே சென்றால் அவர்கள் சந்திப்பது புலிகளை மட்டும் தான். அது சுகமான சூழலாக இருக்காது இரு தரப்பும் வெறிகொண்டு மோதும் களமாகவே இருக்கும்.

இத்தகைய சூழலில் வாழ்ந்து பழகியவர்களுக்கு எழுகின்ற உளவியல் தாக்கம் மிகவும் மோசமானது. இந்தநிலை பல இடங்களிலும் படையினருக்கு கடந்த 2009 மே வரை நீடிக்கவே செய்தது.

முகாமை விட்டு வெளியே செல்ல முடியாதது, இயல்பாக வாழும் மனிதர்களைச் சந்திக்க முடியாது, அடிக்கடி விடுமுறையில் சென்று உறவினர்களைப் பார்க்க முடியாது என்று வெறுப்புகள் பல ஒன்று நேர்ந்து அவர்களை மன விரக்திக்குள் கொண்டு சென்றது.

அதேவேளை, போரின் கடுமையும், அதனால் ஏற்பட்ட உயிர் அச்சம், இறுக்கமான இராணுவ வாழ்வும் ஏற்படுத்திய மனஉளைச்சல் காரணமாக பெருந்தெகையான படையினர் தப்பி ஓடும் நிலை உருவாகியது.

அதுமட்டுமன்றி, படையினர் காவலரண்களிலேயே தற்கொலை செய்து கொள்வதும் அதிகமாக இருந்தது.

பணத்துக்காக படைகளில் சேர்ந்தவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் பரவாயில்லை வடக்கே போக முடியாது என்றளவுக்கு அவர்களை மனஉளைச்சல் துரத்தத் தொடங்கியது.

கடந்த முப்பதாண்டுகளில் படைகளை விட்டுத் தப்பிஓடிய படையினரின் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல.

இப்போது கூட படைகளில் இருந்து தப்பியோடியவர்கள் என்ற பட்டியலில் இருக்கின்றவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 60 ஆயிரம் என்கிறது படைத்தரப்புத் தகவல்.

அவ்வப்போது கொடுக்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு பல்லாயிரக்கணக்கான படையினர் தம்மை படைகளில் இருந்து விலகிக் கொண்டுள்ளனர்.

பல ஆயிரக்கணக்கானோர் பிடிபட்டு தண்டனைகளை அனுபவித்து சிறையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதையெல்லாம் பார்த்தால் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேரையாவது இலங்கை அரசின் தப்பியோடியோர் பட்டியலில் சேர்ந்துள்ளது போலுள்ளது.

இப்போது போர் முடிந்து விட்டது.

இலங்கை இராணுவத்தில் மட்டும் இப்போது 203, 000 படையினர் உள்ளனர். விமானப்படையில் 35, 000 படையினரும் கடற்படையில் 50,000 இற்கும் அதிகமான படையினரும் உள்ளனர்.

கிட்டத்தட்ட மூன்று இலட்சத்தை நெருக்கும் படையினரைக் கொண்ட முப்படைகளிலும் உள்ள பெரும்பாலான படையினர் கடுமையான போர்ச்சூழலுக்குள் வாழ்ந்து பழகியவர்களே.

தினமும் குண்டுவெடிப்புகள், சண்டைகள், தேடுதல் வேட்டை என்று காலத்தைக் கழித்தவர்கள் சாதாரண மக்களுடன் அமைதியாக வாழப் பழகிக் கொள்வதும் முக்கியமானது.

எல்லா நாடுகளிலும் போர் முடிவுக்கு வந்த பின்னர் படையினரை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதற்காக அவர்களுக்கு உளவியல் தியான ஆற்றுகைப்படுத்தல் பயிற்சிகளை வழங்கும் நடைமுறைகள் உள்ளன.

இது போர்ச்சூழலில் இருந்து விடுபட்டு இயல்பான சூழலில் அவர்களை வாழப் பழக்குவதற்கான அணுகுமுறை.

இப்போது அரசாங்கம் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது போன்றதே இதுவும்.

இரண்டினதும் அடிப்படை நோக்கங்கள் ஒன்றுதான்.

போர், சண்டை, அதற்கான பயிற்சிகள் என்றிருந்தவர்களின் வாழ்வு அமைதியான முற்றிலும் வேறுபட்டதொரு சூழலுக்குத் திரும்பும்போது மனக்குழப்பங்களை ஏற்படுத்தும்.

இத்தகைய சூழலில் தான் படையில் இருந்து தப்பிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

படைகளில் இருந்து படையினர் தப்பிச் செல்வது குற்றச் செயல்களின் அதிகப்புக்கு முதலாவது காரணமாகிறது.

ஏனெனில் தப்பிச் சென்ற படையினரால் வெளியே சுதந்திரமாக நடமாட முடியாது வேலை செய்ய முடியாது.

எனவே குற்றங்களில் ஈடுபடுவதைத் தவிர மாற்றுவழிகள் ஏதும் அவர்களுக்கு இருக்காது.

அடுத்து அவர்க்ள் போர்க்காலங்களில் தமது சமூக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைவரையும் தம்மை விடக் கீழானவர்கள் என்றே கருதிப் பழக்கப்பட்டுப் போனவர்கள்.

அவர்களுக்கு இயல்பான சூழலில் அனைவரையும் மதித்து நடக்கின்ற பண்பு உடனடியாக ஏற்பட்டு விடாது.

தப்பிஓடியவர்களுக்கு மட்டுமன்றி படைகளில் இருக்கும் படையினருக்கும் இந்தப் பிரச்சினை உள்ளது.

இத்தகைய நிலையில் வெறுப்பு, காழ்ப்பு என்பவற்றைத் தீர்க்கவும் குறுக்குவழியில் பணத்தைப் பெறவும் அவர்கள் குற்றங்களில் ஈடுபட எத்தனிப்பார்கள்.

இப்போது அரசாங்கம் எதிர்கொண்டுள்ள போருக்கு இதுவே காரணம்.

இப்போது எங்கு ஏதாவது குற்றச்செயல் இடம்பெற்றாலும் உடனடியாகப் பொலிஸார் சந்தேகத்துடன் படைத்தரப்பினரைப் பார்க்கும் நிலை வந்துள்ளது.

புலிகளை அழிக்கப் போய் குற்றவாளிகளை உருவாக்கி விட்ட கதையாக மாறியுள்ளது. இதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டியிருக்கும்.

கண்டித்தனமாக ஆட்சேர்ப்புகள் செய்ததும் போரின் போதும் அதற்குப் பின்னரும் படையினருக்கு சரியான உளநல ஆலோசனைளை வழங்கத் தவறியதும் தான் இந்த நிலைக்குக் காரணம்.

எவ்வாறாயினும், குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு அரசாங்கமே ஒரு காரணமாகி விட்டது என்ற குற்றச்சாட்டு மெல்ல மெல்லக் கிளம்பத் தொடங்கியுள்ளது.

குற்றங்கள் மலிந்து போயுள்ள நிலையில் தப்பி ஓடிய படையினரைப் பிடிக்க மீண்டும் தேடுதலை முடுக்கி விட்டுள்ளது அரசாங்கம். ஆனால் அனைவரையும் பிடிக்க முடியாது. சிலரைப் பிடித்து சிறையில் போடலாம். அனைவரையும் பிடித்துச் சிறையில் போடுவதற்கு நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் போதாது.

புலிகளுக்கு எதிரான போர் உருவாகி விட்டுள்ள இந்தப் போரை அரசாங்கத்தால் இலகுவில் வெற்றி கொள்ள முடியாது. அதற்கு நீண்டகாலம் எடுக்கலாம் அதற்குள் மக்கள் மத்தியில் சலிப்பும் வெறுப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum