அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தீபச்செல்வனின் ‘ஈழம் மக்களின் கனவு’ என்னும் புதிய நூல்

Go down

தீபச்செல்வனின் ‘ஈழம் மக்களின் கனவு’ என்னும் புதிய நூல்  Empty தீபச்செல்வனின் ‘ஈழம் மக்களின் கனவு’ என்னும் புதிய நூல்

Post by Admin Wed Jan 05, 2011 1:04 am

சென்னை புத்தகத் திருவிழாவில் கவிஞர் தீபச்செல்வனின் ‘ஈழம் மக்களின் கனவு’ என்ற புதிய நூல் தோழமை வெளியீடாக வந்திருக்கிறது. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம், பாழ்நகரத்தின் பொழுது ஆகிய மூன்று தொகுப்புக்கள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில்> இது தீபச்செல்வனின் நான்காவது நூலாகும்.
‘ஈழம் மக்களின் கனவு’ என்ற இந்நூல் ஈழம் பற்றிய உரையாடல்களையும் வாக்குமூலங்களையும் கொண்டிருக்கிறது. தீபச்செல்வனுடன் ஷோபாசக்தி நிகழ்த்திய ‘ஈழத்து மக்களும் கனவுமே எனது ஆதர்சம்’ என்ற நேர்காணல் தொடர்ச்சியான விமர்சனத்தினை எதிர்கொண்ட ஓர் உரையாடலாகும். அதேபோல் ‘பதுங்குகுழியில் இருந்து கொஞ்சம் சொற்கள்’ என்ற நேர்காணல் உன்னதம் இதழுக்காக கௌதம சித்தார்த்தன் நிகழ்த்தியது.

ஈழம் மக்களின் கனவு என்பதை இந்த நூலில் இடம்பெறும் சோபாசக்தியின் நேர்காணலில் தெளிவாக சொல்லப்படுகிறது. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு ஈழமே தீர்வு என்பதை அந்த நேர்காணலில் தீபச்செல்வன் சொல்கிறார். இந்த நூலில் அவர் எழுதியுள்ள ஒவ்வொரு பதிவுகளும் ஈழம் மக்களின் கனவு என்பதை சொல்லி நிற்கின்றன. ஈழத்து மக்களின் தனித்துவமான வாழ்க்கையை அடையாளங்களை புரதானங்களை கோரி நிற்கிறது.

ஏனையவை கட்டுரைகளாகும். இவற்றில் ‘கிளிநொச்சியின் கதை’, ‘ஒரு நகரத்தின் பேரழிவு’, ஆகியன தமிழர் வாழ்விடப் பிரதேசங்களின் புரதான நினைவுகளையும் இன்றைய அழிவையும் மக்களின் இன்றைய வாழ்வையும் எடுத்துக்காட்டுகின்றன. இவற்றில் ‘கிளிநொச்சியின் கதை’ என்பது அழிவுகளுக்குப் பின்னர் தமிழர் அடையாளங்கள் அழிக்கப்பட்டு கிளிநொச்சி வேறொரு நகரமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. அதேபோல் ‘ஒரு நகரத்தின் பேரழிவு’ முல்லைத்தீவில் வாழ்ந்த சாதாரண பொது மகன் ஒருவனின் சாதாரண வாழ்வு எப்படி அந்த நகரத்தோடு சிதைந்து போனது என்பதை கதைபோல உருக்கமாக எடுத்தியம்பும் கட்டுரையாகும்.

போருக்குள் வாழ்ந்து சிதைவுகளோடு மீண்ட மக்களின் கதைகளை எடுத்துக் காட்டும் கட்டுரைகள் மூன்று உள்ளன. ஒன்று மீட்சியைக் கூற மற்றைய இரண்டும் மீட்சியில்லாத வாழ்வைக் கூறுகின்றன. ‘நிலம் வென்ற சனங்களின் கதை’ என்பது கிளிநொச்சி சாந்தபுரம் கிராமமக்கள் தங்கள் சொந்தக் காணிகளுக்குத் தங்களை விடுவிக்குமாறு பல துன்பங்களுக்கு மத்தியில் அழுத்தம் கொடுத்து தம் சிதைந்துபோன நிலங்களுக்கு மீண்ட கதையினைக் கூறுகின்றது.

மற்றைய ‘வதைவெளி’ என்ற கட்டுரை மனதளவில் பாரிய மனஉளைச்சல்களையும் விளைவுகளையும் உண்டாக்கக்கூடிய தடுப்பு முகாம்கள் பற்றியும் அவற்றுக்குத் தம் உறவுகளை காண அலையும் மக்களின் கதைகளையும் எடுத்துக்கூறும் கட்டுரை. ‘இடர்நிலத்தில் இன்னும் ஏன் இப்படித்துயரம்’ என்ற கட்டுரை மிதிவெடிகளும், நோயும், அங்க இழப்பும், வறுமையும், ஆற்றமுடியாத இழப்பும் என தொடர் துன்பத்தோடு மீளவும் வாழ ஆசைப்படும் மக்களின் வேதனை மிகுந்த கதைகளை எடுத்தியம்புகின்றது.

ஏனைய மூன்று கட்டுரைகளும் தமிழரின் அடையாள அழிப்பையும் சிங்கள அரசின் அத்துமீறல்களைகளையும் எடுத்துக் காட்டுகின்றன. ‘கனவு உறங்கும் நினைவிடங்களை சிதைக்கும் சிங்கள இராணுவம்’ என்ற கட்டுரை போராளிகளின் நினைவிடங்களாவும் துயிலுமில்லங்களாவும் இருந்த நினைவிடங்களை மனிதாபிமானமற்றவகையில் அழித்து அந்த நினைவிடங்களையும் அவர்களின் தியாகங்களையும் கேலிக்கு உள்ளாக்கும் நிலையை எடு;த்துக் காட்டுகின்றது.

அதேபோல் ‘அபாயத்திற்கு உள்ளாகியிருக்கும் வன்னிக் கோயில்களும் தமிழர் நிலங்களும்’ என்ற கட்டுரை ஆலமரங்களுக்கும் அரசமரங்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை, அதாவது தமிழர் இந்துக்கோயில்கள் உள்ள இடங்களில் புத்தர் சிலைகள் முளைக்கும் அத்துமீறல்களை ‘வன்னி நிலத்தை கைப்பற்றிய பிறகு நீண்டகால நோக்கில் வன்னி நிலத்தை கையகப்படுத்தும் தமிழர்களின் பண்பாட்டை சிதைக்கும் எண்ணம் கொண்ட மகிந்தராஜபக்ஷவின் நவீன படைகளாக புத்தர் சிலைகள் வன்னிக்கு படையெடுக்கின்றன’ என்று நூலாசிரியர் எழுதுகின்றார். இங்கு ஒருபுறம் இன அடையாளம் அழிக்கப்படுவதோடு மறுபுறம் நில ஆக்கிரமிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த இரண்டு நிலைமைகளையும் கட்டுரை எடுத்தியம்புகின்றது.

‘பாழாகும் யாழ்நிலம்’ கட்டுரை யாழ் புகையிரத நிலைய கட்டத்திற்குள் வந்திருந்த சிங்கள மக்கள் தங்கள் நிலமும் இங்கேதான் இருந்தது என முன்னேற்பாட்டோடு வந்திருந்த நிலைப்பாட்டையும் யாழ்ப்பாணத்தில் தலைமுறையாக இன்னமும் பாழடைந்த புகையிரத நிலையக் கட்டடத்துள் இருக்கும் தமிழ்மக்கள் பற்றிய அக்கறையில்லாத நிலையையும் பிறவற்றையும் எடுத்துக்காட்டுகிறது.

ஓட்டுமொத்தமாக இத்தொகுப்பு பேரின்பின்னரான இன்றைய வடக்குப் பிரதேச மக்களின் சிதைந்த வாழ்வையும் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலங்களையும் இழந்துகொண்டிருக்கும் தமிழர் அடையாளங்களையும் கூறுவதாக உள்ளது. போருக்குப் பின்னரான தமிழர் வாழ்வைப்பற்றி அறிய ஒரு குறுக்குவெட்டுமுகமாக இத்தொகுப்பு பலருக்கு பல கதைகளைத் தேட உதவலாம். இது இந்த மக்களின் வாழ்க்கையின் மிகச் சொற்பமான கதைகள். ஏனையவையும் சொல்லப்பட வேண்டும் என்பதையே விமர்சனங்களுக்கு அப்பால் இத்தொகுப்பு வலியுறுத்தி நிற்கின்றது. நிலத்திற்காய் போராடும் மக்களின் நிகழ்கால துயரக்கதைகளை சொல்கிறது.
தீபச்செல்வனின் ‘ஈழம் மக்களின் கனவு’ என்னும் புதிய நூல்  Deepaselvan_402
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum