அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுமா?

Go down

ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுமா? Empty ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுமா?

Post by kaavalan Mon Dec 27, 2010 5:48 am

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த ஐ. நா. நிபுணர் குழுவிடம் போதிய சாட்சியங்கள் இருப்பதாக தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கவலைப்படுகிறார்.
அமைச்சரின் கூற்று ஊகத்தின் அடிப்படையில் எழுந்தாலும், மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும் என்கிற முதுமொழியே இதற்குப் பொருத்தமாகவிருக்கும்.

ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவினர், பான் கீ மூனின் ஐ.நா. நிபுணர் குழுவைச் சந்திப்பதன் ஊடாக, எமது இராணுவத்தை சிக்க வைக்கக் கூடாதெனவும் கழுத்தை வெட்ட வருபவனிடம் வாளை யாராவது தீட்டிக் கொடுப்பார்களாவென்றும் கேள்விக்கணை தொடுக்கிறார் சம்பிக்க ரணவக்க.

இதுவரை 1100 க்கு மேற்பட்ட சாட்சியங்களைப் பதிவு செய்து வைத்துள்ள நிலையில், இக்குழுவினரை இலங்கைக்கு அழைப்பது தவறு என்கிறார்.

இதன்மூலம் இலங்கை தேசமானது தப்பிக்க முடியாத போர்க் குற்றச் சாட்டுக்குள் சிக்கி விடுமாம்.

ஆகவே இச்சந்திப்பை உடன் நிறுத்தி, பான் கீ மூனின் நிபுணர் குழுவினரின் வருகையை தடுத்து நிறுத்தாவிட்டால் தேசப்பற்றுள்ள கட்சிகள், தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டி வருமென அரசை அவர் எச்சரிக்கின்றார்.

ஆனாலும் மடியில் கனமில்லாவிட்டால் இவ்வாறு அச்சப்படுவதற்கு அவசியமில்லை.

திரட்டப்பட்ட வலுவான சாட்சியங்களோடு, இலங்கை தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு நிபுணர்கள் வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதால்தான் இத்தகைய அச்சுறுத்தல்கள் சிங்களப் பேரினவாதத் தரப்பினரிடமிருந்து வெளிவருகின்றது.

தரூஸ்மான் தலைமையிலான இந்த நிபுணர் குழுவின் இறுதியறிக்கைக்கு என்ன நடக்குமென்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டுகின்றார்.

அதாவது எதிர்வரும் மார்ச் மாதத்தில், ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையின் மாநாட்டில், இலங்கைக்கு எதிரான மிக வலுவான அறிக்கையொன்றினை பான் கீ மூனின் நிபுணர் குழு சமர்ப்பிக்குமென்று அவர் எதிர்வு கூறுகின்றார்.

அவ்வாறான சூழ்நிலையில் தமக்கு உதவி செய்யும் நாடுகளால் எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்படுவதோடு, இலங்கை அரசானது தப்பிக்க முடியாத வகையில் போர்க் குற்றச்சாட்டுக்குள் சிக்கி விடுமாம்.

2009 ஆம் ஆண்டு மே மாத இறுதிப் பகுதியில் ஐ. நா மனித உரிமைப் பேரவையால் இலங்கை அரசு தொடர்பான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அதனை மேம்படுத்துவதற்கு உதவியளிப்பதற்காகவும் பேரவையின் 11 ஆவது விசேட கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை 29 நாடுகள் ஆதரித்தன, 12 நாடுகள் எதிர்த்தன, 6 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் மௌனித்திருந்தன.

அவ்வேளையில் இலங்கைக்கு எதிரான வலுவான போர்க் குற்ற ஆதாரங்கள் திரட்டப்படாததால் அது தோல்வியில் முடிந்தது.

இன்றைய நிலைவரம் சற்று வித்தியாசமானது. தற்போதைய 47 நாடுகளடங்கிய பேரவையில் அமெரிக்கா அங்கம் வகிக்கிறது. அதேவேளை அமெரிக்க செனட்டர் குழுவொன்று, நீதியான சுயாதீன விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறது.

அத்தோடு பேரவை கூட்டத் தொடர்களில் விஷேட பிரதிநிதிகளாகக் கலந்து கொள்ளும், நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைக் கண்காணிப்பகமும், அனைத்துலக மன்னிப்புச் சபையும் மற்றும் மேற்குலக கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தும் சர்வதேச நெருக்கடிக் குழுவும் (ICG) ஜனாதிபதியின் கற்றுகொண்ட பாடங்களின் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பகத்தன்மையை அடியோடு நிராகரித்து, சர்வதேச விசாரணை அவசியமென்று அடம்பிடிக்கிறது. இந்நிலையில் ஐ.நா. பொதுச் சபையின் 60/251 தீர்மானத்தின் பிரகாரம், பேரவையின் மூன்றிலொரு உறுப்பு நாடுகளின் ஆதரவு இருந்தால் பிரத்தியேக விஷேட கூட்டத் தொடர் ஒன்றிற்கான அழைப்பினை முன்வைக்கலாமென்கிற விடயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும்.

எவ்வாறாயினும் இந்த விவகாரம், அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படப் போகிறது என்பதனை புரிந்து கொள்ளும் ஆட்சியாளர்கள், இக்குற்றச்சாட்டினை எவர் மீதாவது திருப்பி விட முயற்சிக்கலாமென எதிர்க்கட்சியினர் நம்புகின்றனர்.

ஐ.நா நிபுணர் குழுவினை நாட்டிற்குள் வரவழைப்பதில், வெளிநாட்டு அமைச்சுக்குள் இருக்கும் சில சூழ்ச்சியாளர்கள் முன்னிற்பதாக விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி பகிரங்கமாக எச்சரிக்கின்றது.

தியத்தலாவ இராணுவ பயிற்சி முகாம் விஞ்ஞான பீடத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேசம் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவையென்றும் நாட்டில் யுத்தம் முன்னெடுக்கப்படவில்லை, 2006 இல் ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் இன்னமும் முடிவடையவில்லையென்றும் புதிய விளக்கமொன்றை அளித்துள்ளார்.

அரசின் மனிதாபிமான நடவடிக்கையால், வடக்குகிழக்கெங்கும் 80,000 க்கு மேற்பட்ட விதவைகளும் பல்லாயிரக்கணக்கான அங்கவீனர்களும், எவ்வாறு உருவாக்கப்பட்டார்கள் என்பதை அரசு தெளிவாக்கினால் நல்லது.

ஆனாலும் நிபுணர் குழுவிடம் கையளிக்கப்பட்ட சாட்சியங்களை, பாதிப்புற்ற மக்களே வழங்கினார்கள் என்பது தெரிந்திருந்தும் சர்வதேச சமூகத்தின் மீது பழி சுமத்துவது பொருத்தமாகப் படவில்லை.

இவை தவிர, இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக, ஐ.நா. சபையின் பொதுச் செயலாளரினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினர், இலங்கைக்கு வருகை தரும் விடயத்தை, அரசு தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையென ஐ.தே.கட்சியின் பிரதிநிதி லக்ஷ்மன் கிரியெல்ல ஆதங்கப்படுகிறார்.

போர்க்குற்ற விவகாரம் குறித்து, இந்நாட்டின் இறைமையையும், நற்பெயரையும் பாதுகாக்கக் கூடிய ஒரே நபரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை, இக்குழுவின் முன் ஆஜர்படுத்த வேண்டுமென்பதே ஐ. தே. கட்சியினரின் விருப்பமாகவிருக்கிறது.

ஆகவே நிபுணர் குழுவின் வரவினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எதிரணியினர், வெள்ளைக் கொடியுடன் வரும் விடுதலைப் புலிகளைக் கொல்ல வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவுறுத்தியதாக பொன்சேகா கூறிய விவகாரம் சம்பந்தமான வழக்கில், முதன்மைச் சாட்சியமாகவிருக்கும் சண்டேலீடர் ஆசிரியர் பிரடிகா ஜான்ஸ் (Fredica Janz) அம்மையாரையும் நிபுணர் குழுவினர் சந்திக்க ஏற்பாடு செய்தால் பொருத்தமாக அமையும்.

போர்க் குற்றச்சாட்டு விவகாரங்கள் கொழும்பு அரசியலில் எதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வடக்கில் நடைபெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான நியாயப்படுத்தல்களும் ஊடகங்களை நிரப்புகின்றன.

தென் பகுதிகளில் காணிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதனால் வடக்கில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதாக வியாக்கியானமளிக்கின்றார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர.

குறிப்பாக திருமலைப் பிரதேசங்களில் பல சிங்களக் கிராமங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதாகவும், வடக்கு கிழக்கு பகுதிகளில் சிங்களவர்களின் நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையில் பிரிவினைவாத சக்திகள் மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் செயற்படுவதாகவும் உயிர்த்தியாகம் புரிந்து புலிகளிடமிருந்து நாட்டை மீட்ட இராணுவத்தினருக்கு வடகிழக்கில் சுதந்திரமாக குடியேற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கண்ணீர் வடிக்கின்றார்.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும், இராணுவ பலமும் கொண்ட சிங்கள தேசம், சிங்களவர்களைக் குடியேற்ற முடியாமல் தவிக்கிறது என்று கூறுவதை எவரும் நம்ப மறுப்பார்கள்.

சிங்களக் குடியேற்றம் நடைபெறவில்லையென உலகை ஏமாற்ற “உயிர்த்தியாகம் செய்து பெற்ற நிலமிது’ என்கிற கதையாடல்கள், பொருத்தமாக அமையாது என்பதை தேசப்பற்றுள்ள இயக்கங்கள் புரிந்து கொள்வதில்லை.

யுத்தம் முடிவுற்ற போதிலும், தமிழீழ தாயகத்திற்கான பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதென, நிழல் யுத்தமொன்றிற்கு தயாராகின்றன பேரினவாத இயக்கங்கள்.

அதேவேளை தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்திற்காக 50,000 வீடுகளைக் கட்டித் தருவதாக உறுதியளித்து, அரியாலையில் அடிக்கல் நாட்டிய இந்திய வெளிநாட்டமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, தற்போது 5000 வீடுகளை மட்டுமே நிர்மாணிக்க முடியுமென்றும், மீதி 45,000 வீடுகளை திருத்திக் கொடுக்கலாமெனக் கூறுவதை குணதாச அமரசேகர கண்டுகொள்ளவில்லை.

இந்தியாவின் வாக்குறுதிகள் தேய்ந்து வரும் இந்நிலையில் தமிழ் மக்களுக்காகப் பரிந்து பேசப் புறப்பட்டுள்ளார் சோனியா காந்தியின் அரசியல் வாரிசான ராகுல் காந்தி.

தமிழ் நாட்டில் தேர்தல் வரும் போது, இந்திய அரசியல்வாதிகளிடம் ஈழத் தமிழ் மக்கள் மீதான கரிசனை, அதிகரிப்பது இயல்பான விடயம்.

அதேவேளை ஆட்சியையே அதிர வைக்கும் இரண்டு இலட்சம் கோடி ரூபாய் (2G Spectrum) ஊழல் விவகாரம் பூதம்போல் கிளம்பும் போது விடுதலைப் புலிகளால் பிரதமர் மன்மோகன் சிங், முதலமைச்சர் கருணாநிதி மற்றும் சோனியா காந்திக்கு உயிராபத்து என்று உளவியல் பரப்புரைகளை ஆரம்பித்து விடுவார்கள்.

இலங்கையிலும் இந்தியாவிலும் புலிகளை வைத்தே அரசியல் அதிகாரங்கள் தக்க வைக்கப்படுகின்றன என்பது போல் தெரிகிறது. அடிக்கடி விக்கும் விக்கிலீக்ஸும் ராகுலை விடுவதாக இல்லை.
ஆகவே உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பாரிய ஊழல் மோசடி, அந்நாட்டின் அரசியல்வாதிகளை அவ்விவகாரத்தில் எழும் சர்ச்சைகளுக்குள் மூழ்கடித்து விடுமென எதிர்பார்க்கலாம்.

இதனால் இலங்கை விவகாரத்தில் செலுத்தும் அக்கறை ஓரங்கட்டப்படக் கூடிய வாய்ப்புண்டு. இலங்கையிலா அல்லது வெளியிலா ஐ.நா.வின் நிபுணர் குழுவினைச் சந்திப்பது என்கிற விவகாரத்தில் கொழும்பு அரசியல் தலைமைகள் மூழ்கி விடும்.

ஆனாலும் தயாரிக்கும் இறுதி அறிக்கையை வைத்து, ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதனை புலம்பெயர் மக்களும், தாயக மக்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை.

அடுத்தகட்ட நகர்விற்கான நிகழ்ச்சி நிரலை, பான் கீ மூன் வெளிப்படுத்தும் வரை காத்திராமல், தொடர்ச்சியான போராட்ட முன்னெடுப்புகளை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மேற்கொள்வது தற்போது உணரக் கூடியதாகவிருக்கிறது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum